இயேசு

திருநெல்வேலியில் நாடார் சமூகத்தவர் அதிகமாக கிறிஸ்தவத்தை ஏற்றதால்,
அங்கு இயேசு நாதர் கிடையாது, இயேசு நாடார் தான்.

மாட்டுத் தொழுவத்தில் பிறந்ததால்,
கிறிஸ்துவைக் கோனாராகக் கருதலாம்.

அவர் மீன் உணவை எல்லாருக்கும் கொடுத்ததால்,
மீனவராகவும் கருதலாம்.

தச்சு வேலை செய்ததால்,
ஆசாரி என்று அன்போடும்,
விஸ்வகர்மா என்று வீம்பாகவும் கருதலாம்.

எல்லோருக்கும் நற்செய்தியை அறிவித்ததால்,
பறையராகவும் இருக்கலாம்.

இயேசுவை, ஈசா நபி என்பதால்,
இஸ்லாமியராகவும் இருக்கலாம்.

மனிதனை மண்ணில் இருந்து படைத்தார் என்று கிறிஸ்தவர்கள் நம்புவதால், குயவராகவும் இருக்கலாம்.

எல்லோரையும் சுத்தப்படுத்தியதால்,
அருந்ததியராகவும் இருக்கலாம்.

எல்லோரையும் குணப்படுத்தியதால்,
மருத்துவராகவும் இருக்கலாம்.

கோதுமைக் கதிர்களை அறுத்ததால்,
பள்ளராக இருக்கலாம்.

தேவ மைந்தன் என்று அழைக்கப் படுவதால்,
தேவராகவும் இருக்கலாம்.

குருமார்களை சாட்டையால் அடித்ததால்,
அன்றையப் பெரியாராகவும் இருக்கலாம்.

அப்பத்தையும், மீன்களையும் எல்லோருக்கும் சமமாக பங்கிட்டுக் கொடுத்ததால்,
கம்யூனிஸ்டாகவும் இருக்கலாம்.

ஜீசஸ் கிரைஸ்ட் என்பதை, இயேசு நாதர் என்று மொழி பெயர்த்தது யார்?
ஈச நாதன் என்ற சைவத்தொணி தூக்கலாக இருக்கிறது.
அதனால், பிள்ளைமாராகக் கருதலாம்.

பரதவர்கள் முதன்முதலில் கிறிஸ்தவத்தை ஏற்றார்கள்.
நெய்தல் குடிகளை சைவம் உள்வாங்கியதன் வெளிப்பாடாய் தான்,
63 நாயன்மார்களில் முதல் நாயன்மாரான அதிபத்தர்,
பரதவர் சமூகத்தைச் சார்ந்தவராக இருக்கிறார்.

இந்தியக் கிறிஸ்தவர்களே!
சாதியை விட்டொழியுங்கள்.
அதுவரை உங்களுக்கு இயேசு பிறக்கப் போவதே இல்லை.
உங்களைக் காக்கப் போவதும் இல்லை.

இங்கு கிறிஸ்தவர்கள் யாரும் கிடையாது.
சாதிக் கிறிஸ்தவர்களே உண்டு.
கர்த்தர் ஒருநாளும் உங்களை மன்னிக்கமாட்டார்.
ஆமென்.

படித்ததில் பிடித்தது.....

26 வார்த்தைகள்

A - Appreciation
மற்றவர்களின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள்.

B - Behaviour
புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரம் இல்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.

C - Compromise
அற்ப விடயங்களைப் பெரிது படுத்தாதீர்கள். மனம் திறந்து பேசி சுமுகமாக தீர்த்துக்கொள்ளுங்கள்.

D - Depression
மற்றவர்கள் புரிந்துகொள்ளவில்லையே என்று சோர்வடையாதீர்கள்.

E - Ego
மற்றவர்களை விட உங்களை உயர்வாக நினைத்துக் கொண்டு கர்வப்படாதீர்கள்.

F - Forgive
கண்டிக்கக்கூடிய அதிகாரமும் நியாயமும் உங்கள் பக்கம் இருந்தாலும், எதிர்த் தரப்பினரை மன்னிக்க வழி இருக்கிறதா என்று பாருங்கள்.

G - Genuineness
எந்த விடயத்தையும் நேர்மையாகக் கையாளுங்கள்.

H - Honesty
தவறு செய்தால் உடனே மன்னிப்பு கேட்பதைக் கெளரவமாகக் கருதுங்கள்.

I - Inferiority Complex
எவரையும் பார்த்து பிரமிக்காதீர்கள். நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்ற தாழ்வு மனப்பான்மையை விடுங்கள்.

J - Jealousy
பொறாமை வேண்டவே வேண்டாம். அது கொண்டவனையே கொல்லும்.

K - Kindness
இனிய இதமான சொற்களை மட்டுமே பயன்படுத்துங்கள்.

L - Loose Talk
சம்பந்தமில்லாமலும் அர்த்தமில்லாமலும் பின் விளைவு அறியாமலும் பேச வேண்டாம்.

M - Misunderstanding
மற்றவர்களைத் தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள்.

N - Neutral
எப்போதும் எந்த விஷயத்தையும், முடிவு எடுத்துவிட்டுப் பேச வேண்டாம். பேசிவிட்டு முடிவு எடுங்கள். நடுநிலை தவறாதீர்கள்.

O - Over Expectation
அளவுக்கு அதிகமாக எதிர்பார்ப்பு வைக்காதீர்கள். தேவைக்கு அதிகமாக ஆசைப்படாதீர்கள்.

P - Patience
சில சங்கடங்களை சகித்துத்தான் ஆகவேண்டும் என உணருங்கள்.

Q - Quietness
தெரிந்ததை மாத்திரமே பேசுங்கள். அநேகப் பிரச்னைகளுக்குக் காரணம், தெரியாததைப் பேசுவதுதான். கூடுமானவரை பேசாமலே இருந்துவிடுங்கள்.

R - Roughness
பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டாதீர்கள்.

S - Stubbornness
சொன்னதே சரி, செய்ததே சரி என பிடிவாதம் பிடிக்காதீர்கள்.

T - Twisting
இங்கே கேட்டதை அங்கேயும், அங்கே கேட்டதை இங்கேயும் சொல்வதை விடுங்கள்.

U - Underestimate
மற்றவர்களுக்கும் மரியாதை உண்டு என்பதை மறவாதீர்கள்.

V - Voluntary
அடுத்தவர் இறங்கி வரவேண்டும் என்று காத்திராமல் நீங்களே பேச்சை முதலில் தொடங்குங்கள். பிரச்னை வரும்போது எதிர்த்தரப்பில் உள்ளவரின் கருத்துக்களுக்கும் காது கொடுங்கள்.

W - Wound
எந்தப் பேச்சும் செயலும் யார் மனதையும் காயப்படுத்தாமல் இருக்கட்டும்.

X - Xerox
நம்மை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ, அப்படியே மற்றவர்களை நாம் நடத்துவோம்.

Y - Yield
முடிந்தவரை விட்டுக் கொடுங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை; கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை.

Z - Zero
இவை அனைத்தையும் கடைப் பிடித்தால் பிரச்னை என்பது பூஜ்ஜியம் ஆகும்.

படித்ததில் பிடித்தது.....

ஆண்

ஆண்களை பற்றி....
ஆண்

ஆண் என்பவன்...
கடவுளின் உன்னதமான படைப்பு.

சகோதரிகளுக்காக, இனிப்புகளை தியாகம் செய்பவன்..
பெற்றோர்களின் ஆனந்தத்திற்காக, தன் கனவுகளை தியாகம் செய்பவன்.

காதலிக்கு பரிசளிக்க,
தன் பர்ஸை காலி செய்பவன்.

மனைவி குழந்தைகளுக்காக , தன் இளமையை அடகு வைத்து அலட்டிக் கொள்ளாமல் அயராது உழைப்பவன்.

எதிர்காலத்தை லோன் வாங்கி கட்டமைத்துவிட்டு, அதனை அடைக்க வாழ்க்கை முழுதும் லோ லோ என்று அலைபவன்..

இந்த போராட்டங்களுக்கு இடையில்,
மனைவி-தாய்-முதலாளிகளின் திட்டுகளை வாங்கி,
தாங்கிக்கொண்டே ஓடுபவன்.

அடுத்தவர்களின் ஆனந்தத்திற்காகவே ஆயுள் முழுக்க அர்ப்பணிப்பவன்.

அவன் வெளியில் சுற்றினால்,
'உதவாக்கரை' என்போம்.

வீட்டிலேயே இருந்தால்,
'சோம்பேறி' என்போம்.

குழந்தைகளை கண்டித்தால்,
'கோபக்காரன்' என்போம்,

கண்டிக்கவில்லை எனில்,
'பொறுப்பற்றவன்' என்போம்.

மனைவியை வேலைக்கு செல்ல, அனுமதிக்காவிடில்
'நம்பிக்கையற்றவன்' என்போம்,

அனுமதித்தால் 'பொண்டாட்டி சம்பாத்தியத்தில் பொழப்பை ஓட்டுபவன்' என்போம்.

தாய் சொல்வதை கேட்டால்,
'அம்மா பையன்' என்போம்.

மனைவி சொல்வதை கேட்டால்,
'பொண்டாட்டி தாசன்' என்போம்.

ஆக மொத்தத்தில் ஆண்களின் உலகம், தியாகங்களாலும் வியர்வையாலும் சூழப்பட்டது.

இதனை பகிர்ந்து, ஆண்களுக்கு புன்னகையையும்
பெண்களுக்கு புரிதலையும், ஏற்படுத்தலாம்...

ஆண்
அழத் தெரியாதவன் அல்ல

கண்ணீரை
மறைத்து வைக்கத் தெரிந்தவன் ..

அன்பில்லாதவன் அல்ல
அன்பை மனதில் வைத்து
சொல்லில் வைக்கத் தெரியாதவன் ..

வேலை தேடுபவன் அல்ல
தன் திறமைக்கான
அங்கீகாரத்தை தேடுபவன் ..

பணம் தேடுபவன் அல்ல
தன் குடும்பத்தின்
தேவைக்காக ஓடுபவன் ..

சிரிக்கத் தெரியாதவன் அல்ல
நேசிப்பவர்களின் முன்
குழந்தையாய் மாறுபவன் ..

காதலைத் தேடுபவன் அல்ல
ஒரு பெண்ணிடம்
தன் வாழ்க்கையை தேடுபவன் ..


கரடுமுரடானவன் அல்ல ..
நடிக்கத் தெரியாமல்
கோபத்தை கொட்டிவிட்டு
வருந்துபவன்.

விட்டுக்கொடுத்தல், உதவி செய்தல்: உண்மை சம்பவம்

“விட்டுக்கொடுக்குறதாலேயோ, அடுத்தவங்களுக்கு உதவி செய்றதாலேயோ எனக்கு என்ன இலாபம்?” என்று யோசிக்கும் யதார்த்த வாதியா நீங்கள்?
அப்படியானால், இந்தப் பதிவு உங்களுக்கு அவசியம்.

“என் வாழ்க்கையில எவ்வளவோ பேருக்கு உதவியிருக்கேன். எவ்வளவோ விட்டுக்கொடுத்திருக்கேன். அதனால் என்ன புண்ணியம்?” என்று விரக்தியில் இருப்பவரா நீங்கள்? இந்த பதிவு உங்களுக்கும் தான்.

“வரும்போது என்ன கொண்டு வந்தோம்? போகும்போது என்ன கொண்டு போகப்போறோம். வாழுமட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்”என்ற கொள்கையுடையவரா நீங்கள்? இந்தப் பதிவின் அவசியம் உங்களுக்கும் தான்.

உதவி செய்தல்

1892 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவன் அவன். அவனுக்கு உற்றார் உறவினர் எவரும் இல்லை. தன்னுடைய படிப்பிற்கான கட்டணத்தை கட்ட கூட அவனுக்கு வசதியில்லை. அவனும் அவன் நெருங்கிய நண்பன் ஒருவனும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வருகிறார்கள்.

பிரபல இசைக் கலைஞர் ஒருவரை வைத்து கல்லூரியில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தி அதன் மூலம் இவர்கள் படிப்பிற்கு தேவையான நிதியை திரட்டுவது என்று முடிவானது. அதற்காக அந்த சமயத்தில் அமெரிக்காவிலும் ஏன் உலகம் முழுதும் உலகப் புகழ் பெற்று விளங்கிய போலந்து நாட்டை சேர்ந்த பியானோ இசைக்கலைஞர் இக்னேஸி ஜே.பேட்ரெவ்ஸ்கியை சந்தித்து தேதி கேட்டார்கள். அவரது முகாமையாளரோ “ஐயா வருவார். ஆனால் நீங்கள் அவருக்கு $2,000 தரவேண்டும்”என்று கூற, இவர்களும் மகிழ்ச்சியாக ஒப்புக்கொள்கிறார்கள்.

பேட்ரெவ்ஸ்கி வருவதாக சொன்னதே மிகப் பெரிய வெற்றி என்பதால் இவர்கள் அந்த நிகழ்ச்சியை பிரபலமாக்க முடிவு செய்து, அல்லும் பகலுமாக நிகழ்ச்சிக்காக திட்டமிட்டு உழைக்கிறார்கள்.

நிகழ்ச்சிக்கான அந்த நாளும் வந்தது. அந்த நாளில் எதிர்பாராதவிதமாக நகரில் வேறு சில முக்கிய நிகழ்வுகள் இருந்தபடியால், எதிர்பார்த்தபடி நுழைவுச்சீட்டுக்கள் விற்பனையாகவில்லை. ஆகையால் அரங்கம் நிரம்பவில்லை. அரும்பாடுபட்டு விழாவை ஏற்பாடு செய்த இவர்களுக்கு எப்படி இருக்கும்? மனதை திடப்படுத்திக்கொண்டு பேட்ரெவ்ஸ்கியை சந்தித்து நடந்ததை கூறி, நிகழ்ச்சியை ரத்து செய்து விடலாம் என்கிறார்கள். ஆனால் பேட்ரெவ்ஸ்கி மறுத்துவிடுகிறார். “நான் திட்டமிட்டபடி நடத்தியே தீருவேன்”என்கிறார்.

ஒரு வழியாக நிகழ்ச்சி முடிந்த பின்னர், அவரை சந்திக்கும் மாணவர்கள் அவரிடம் $1,600 கொடுத்து, “இது தான் மொத்தம் வசூலான தொகை. மீதியுள்ள தொகைக்கு முன் தேதியிட்டு காசோலை கொடுத்துவிடுகிறோம். விரைவில் அந்த கணக்கில் பணம் செலுத்திவிடுகிறோம். பெரிய மனதுடன் வாங்கிக்கொள்ளுங்கள்”என்று கூறி கெஞ்சியபடி அவரிடம் பணத்தையும் காசோலையையும் கொடுக்க, அதை வாங்கி காசோலையை கிழித்துப் போட்ட பேட்ரெவ்ஸ்கி அவர்கள் கொடுத்த தொகையை அவர்களிடமே கொடுத்து “நீங்கள் எனக்கு தரவேண்டிய கட்டணத்தை தரவேண்டாம். அதை தள்ளுபடி செய்கிறேன். இந்த பணத்தை வைத்துக்கொண்டு உங்கள் படிப்புக்கான கட்டணத்தை கட்டுங்கள்”என்கிறார்.

அவர்கள் கண்கள் கலங்கியபடி அவருக்கு நன்றி கூறுகின்றனர்.

நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்கு வாடகை கொடுக்க கூட வசதியின்றி அந்த மாணவர்கள் சிரமப்படுவதை அறிந்துகொள்ளும் பேட்ரெவ்ஸ்கி அந்த தொகையையும் இறுதியில் தானே செலுத்திவிடுகிறார்.

பேட்ரெவ்ஸ்கி மிகப் பெரிய செல்வந்தர். அவரை பொறுத்தவரை அது சாதாரண தொகை தான். ஆனால் அவருக்குள் இருந்த மனிதாபிமானத்தை அந்த சம்பவம் உணர்த்தியது.

யாரோ முன் பின் தெரியாத இரு மாணவர்களிடம் ஏன் பேட்ரெவ்ஸ்கி இப்படி நடந்துகொள்ளவேண்டும்? அதனால் அவருக்கு என்ன லாபம்?

“எரியும் வீட்டில் பிடிங்கிய வரை லாபம் என்று கருதுவது தானே புத்திசாலித்தனம். நாம் விட்டுக்கொடுத்தாலோ இல்லை உதவி பண்ணினாலோ அதனால் நமக்கு என்ன லாபம்?” இப்படித் தான் பெரும்பாலானோர் நினைப்பார்கள்.

ஆனால் பேட்ரெவ்ஸ்கி, “நான் உதவாவிட்டால் இவர்களுக்கு வேறு யார் உதவுவார்கள்? இவர்களுக்கு உதவுவதால் நாமொன்றும் குறைந்துபோகப்போவதில்லை” என்று கருதியே அந்த உதவியை செய்தார்.

ஆண்டுகள் உருண்டன.

பேட்ரெவ்ஸ்கி காலப்போக்கில் மேலும் புகழின் உச்சிக்கு சென்று ஒரு கட்டத்தில் போலந்து நாட்டின் பிரதம மந்திரியாகவே ஆகிவிட்டார். மிகப் பெரும் தலைவராக விளங்கி நல்லாட்சி நடத்தி வந்தார். ஆனால் கெட்ட காலம் முதலாம் உலகப் போர் துவங்கிய காலகட்டம் அது. போலந்து நாடு போரின் பிடியில் சிக்கி சின்னாபின்னமானது. போர் முடிவுக்கு வரும் தருவாயில் மக்கள் அனைத்தையும் இழந்து வறுமையில் உழன்றனர். எங்கும் பஞ்சம் தலைவிரித்தாடியது. இது 1918 ஆம் ஆண்டு.

எப்படி நிலைமையை சமாளிப்பது? பசியோடிருக்கும் தன் இலட்சக்கணக்கான மக்களுக்காக யாரிடம் போய் உதவி கேட்பது? கலங்கித் தவிக்கிறார் பேட்ரெவ்ஸ்கி. கடைசியில் அமெரிக்காவின் ஆபத்துக்கால உதவிக் குழு அராவை (ARA - American Relief Administration)அணுகுகிறார். அதன் தலைவராக இருந்தவர் ஹெர்பெர்ட் ஹூவர் என்பவர் (இவர் பின்னாளில் அமெரிக்காவின் 31 வது ஜனாதிபதியானார்).

பேட்ரெவ்ஸ்கி கேட்டுக்கொண்டதையடுத்து அமெரிக்காவின் உதவிக்கரம் போலந்துக்கு நீள அடுத்த சில நாட்களில் அமெரிக்காவிலிருந்து போலந்து நாட்டிற்கு ஆயிரக்கணக்கான டன்கள் உணவு, தானியங்கள் மற்றும் மளிகைப் பொருட்கள் அனுப்பப்பட்டன. அதன் மூலம் சுமார் 1.5 மில்லியன் போலந்து மக்கள் பசியாறினர்.

ஒரு பேரழிவு மற்றும் பஞ்சத்திலிருந்து போலந்து மக்கள் தப்பினர். பேட்ரெவ்ஸ்கி நிம்மதி பெருமூச்சுவிட்டார். தான் கேட்டவுடன் தன் மக்களுக்கு உணவு பொருட்களை டன் கணக்கில் அனுப்பி அவர்களை பட்டினி சாவிலிருந்து காப்பாற்றிய அமெரிக்காவின் ஆபத்துக்கால உதவிக் குழுவின் தலைவரை நேரில் சந்தித்து நன்றி சொல்ல விரும்பினார் பேட்ரெவ்ஸ்கி.

ஹெர்பெர்ட் ஹூவரை நேரில் சந்தித்து கண்கள் பனிக்க நன்றி தெரிவிக்கிறார்.

“இல்லை… இல்லை… நீங்கள் நன்றி சொல்லக்கூடாது. நீங்கள் செய்த உதவியைத்தான் நான் உங்களுக்கு திருப்பிச் செய்தேன். உங்களுக்கு நினைவிருக்கிறதா? 25 ஆண்டுகளுக்கு முன்பு இங்கே கல்லூரி மாணவர்கள் இருவருக்கு அவர்கள் பணம் கட்ட உங்கள் நிகழ்ச்சியை இலவசமாக நடத்திக்கொடுத்து உதவினீர்கள் அல்லவா?அந்த மாணவர்களில் ஒருவன் தான் நான்” என்கிறார் ஹெர்பெர்ட் ஹூவர்.

பேட்ரெவ்ஸ்கி கண்கள் கலங்கியபடி அவரை அணைத்துக்கொள்கிறார்.

காலம் எப்போது யாரை எங்கு வைக்கும் என்று ஒருவராலும் கூற முடியாது.

இத்தோடு முடியவில்லை ஹூவரின் நன்றிக்கடன். இரண்டாம் உலகப் போர் முடிந்த தருவாயில் (1946) போலந்துக்கு உதவுவதற்கு என்றே ஒரு தனி ஆணைக்குழு ஹூவர் தலைமையில் அமைக்கப்பட்டது. அதன் சார்பாக போலந்துக்கு நேரில் சென்ற ஹெர்பர்ட் ஹூவர், அந்நாட்டிற்கு அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு தேவையான உணவுத் திட்டங்களை வகுத்துக்கொடுத்துவிட்டு அவற்றிற்கான அமெரிக்க அரசின் உதவிகளையும் ஏற்பாடு செய்துவிட்டு வந்தார். இதன் காரணமாக போலந்து நாட்டின் நாடாளுமன்றத்தில் ஹெர்பெர்ட் ஹூவரை புகழ்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவருக்கு போலந்து நாட்டு பல்கலைக்கழகங்கள் டாக்டர் பட்டங்கள் வழங்கின. போலந்து மக்கள் மனதில் ஒரு ஹீரோவாக வாழ்ந்து வந்தார் ஹெர்பெர்ட் ஹூவர்.

அதுமட்டுமல்லாமல் இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் UNICEF, CARE என்று இரண்டு புதிய சர்வதேச தொண்டு அமைப்புக்களை ஹூவர் ஏற்படுத்தினார். அதன் மூலம் உலக முழுதும் பல லட்சம் மக்கள் இன்றும் பசியாறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனிப்பட்ட ஒருவருக்கு செய்த உதவி, எப்படி ஒரு நாட்டிற்கே பன் மடங்கு திரும்ப கிடைத்தது பார்த்தீர்களா?

இந்த உலகில் நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதை பன்மடங்கு அறுவடை செய்வீர்கள்.

ஏனெனில், விதைத்தவன் உறங்கினாலும், ஏன் அந்த படைத்தவனே உறங்கினாலும் விதைகள் ஒரு போதும் உறங்குவதில்லை. பலன் கருதாமல் பேட்ரெவ்ஸ்கி செய்த உதவி இது. ஆனால் காலத்தினால் செய்த உதவியாயிற்றே! காலம் குறித்து வைத்துகொண்டது..

நன்றி: முகநூல் பதிவு

தன்னம்பிக்கை : பென்சில்போல் வாழ்ந்தால் வெற்றி

ஒரு மனிதர் தன் வாழ்வில் தொட்ட துறைகளில் எல்லாம் வெற்றி பெற்று வந்தார்.

“வெற்றிக்கு யார் வழிகாட்டி” என்று நிருபர்கள் கேட்டார்கள். “இவர்தான்” என்று சுட்டிக் காட்டினார்.
தன்னம்பிக்கை

அவர் காட்டிய திசையில், தங்க சட்டமிடப்பட்ட பென்சில் ஒளிப்படம் இருந்தது.

நிருபர்கள் திகைத்தார்கள். அவர் சொன்னார், இந்தப் பென்சில் எனக்கு 5 விடயங்களைக் கற்றுத் தந்தது.

பல விடயங்களை எழுதுவதற்கும், வரைவதற்கும் தன்னை முழுமையாக நம் கைகளில் ஒப்படைக்கிறது

அவ்வப்போது நாம் அதை சீவுகிறோம். சீவும் போதெல்லாம் கூர்மையடைகிறது.

தவறுகள் செய்தாலும், அவற்றை அழிப்பதற்கு இடம் கொடுக்கிறது. வெளியே எப்படியிருந்தாலும் உள்ளே உடையாமல் ஒரு சீராய் இருக்கிறது.

சின்னஞ்சிறிய பென்சிலாகும் அளவு சீவப்பட்டாலும் எழுதிக் கொண்டிருக்கிறது. கடைசி வரை தன் சுவட்டினைக் காகிதத்தில் பதிக்கிறது. இதைப் பார்த்துதான் என் வாழ்க்கையை நான் சீரமைத்துக் கொண்டேன்.

பல அரிய விஷயங்களை நிகழ்த்த நான் ஒரு கருவி தான் என்கிற அடக்க உணர்வோடு என்னைக் கடவுளின் கைகளில் ஒப்படைத்திருக்கிறேன்.

சோதனைகள் வரும்போதெல்லாம், மேலும் மேலும் கூர்மையாகிக் கொள்கிறேன்.

தவறுகள் செய்திருப்பதாகத் தெரிந்தால் உடனே திருத்திக் கொள்கிறேன்.

வெளிச்சூழலில் புகழ் வந்தாலும் பழிச்சொல் வந்தாலும் உள்ளே உடையாமல் உறுதியாய் இருக்கிறேன்.

கடைசி வரையில் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.காலத்தில் நம் சுவட்டைப் பதித்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன் என்றார்.

கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு, பெரிய பெரிய விடயங்கள் பென்சிலில் இருப்பது புரிந்தது.

நன்றி: முகநூல் பதிவு

வெற்றிகரமான வாழ்க்கைக்கு பத்து வழிகள்

முகநூல் வழியாக பெறப்பட்ட வெற்றிகரமான வாழ்க்கைக்கு பத்து வழிகள் என்ற இக்கருத்துக்கள் மீளவும் இங்கு பதிவிடப்படுகின்றன.

வெற்றிகரமான வாழ்க்கைக்கு பத்து வழிகள்

உங்களுக்கு இழைக்கப்பட்ட அவமானங்கள் எல்லாவற்றையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பழிவாங்கிட அல்ல, தப்பித்தவறி கூட அதே தவறை இன்னொருவருக்கு செய்துவிடக்கூடாது. மீண்டும் அது நமக்கு நேர்ந்துவிடக்கூடாது.


யாரையும் குறைவாக மதிப்பிட்டுப் பார்க்காதீர்கள். அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய ஏதாவது ஒன்று இருக்கும்.

நமக்கு பிடிக்காதவாரகவே இருந்தாலும், அவரின் சிறு வெற்றிக்கு மனதார ஒரு வாழ்த்து சொல்லிவிட்டு செல்லுங்கள். உங்கள் மனம் தெளிவாக இருக்கட்டும்.

'என்ன வாழ்க்கைடா இது' என்று நினைப்பதை விட, 'இந்த வாழ்க்கைக்கு என்னடா குறை' என்று எண்ணி வாழுங்கள். வாழ்க்கை வளம் பெற ஆரம்பிக்கும்.

மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணத்தை ஒழித்துக்கட்டுங்கள்.. அது தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிவிடும். மற்றவர்களுக்காக வாழ முடியாது.

நீங்கள் நேசிப்பவர்கள் பிரிந்து சென்றால், சபிக்காதீர்கள். அவர்கள் நல்லபடியாக வாழ பிரார்த்தனை செய்யுங்கள். உண்மையான அன்பு
என்பது அதுதான்.

சிறிய வாய்ப்புகள் என்றாலும் அவற்றை சிறப்பாகச் செய்து முடியுங்கள்.. பெரிய வாய்ப்புகள் தேடி வரும்.

பிறரை ஒதுக்கி வைக்கு முன் ஒரு நிமிடம் சிந்தியுங்கள். உங்களை பிறர் ஒதுக்கி வைத்தால் தாங்கிக் கொள்ள முடியுமா என்று சிந்தியுங்கள்.

எதிரே வருபவரின் தகுதியை பாராமல் சிறு புன்னகை உதித்தபடி கடந்து செல்லுங்கள்.

உங்களைப் பிடிக்காமல் ஒருவர் விலகிச் செல்கிறார் என்றால் அமைதியாக
ஒதுங்கிவிடுங்கள்.

தமிழ்த் தேசியம் என்பது இந்தியத் தேசியம் அல்ல

தினமணி நாளிதழில் 01.08.2018 அன்று திரு. அர்ஜூன் சம்பத் எழுதிய “தமிழ்த்தேசியமும் இந்தியத்தேசியமும்” என்ற கட்டுரையில் தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், காப்பிய இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள் ஆகியவற்றில் “தமிழ்நாடு”என மொழியின் பெயரால் “ஒரு தனிநாடு ஒரு தனித்தேசிய இனம் இருந்ததாகக் குறிப்பு இல்லை”என்று கூறியுள்ளார். “வெறும் மொழியின் அடிப்படையில் மட்டும் எந்தத் தேசிய இனமும் அடையாளம் காணப்படுவதில்லை”என்றும் எழுதியுள்ளார்.

தமிழ்த் தேசியம்
தமிழ்த் தேசியம்

அர்ஜூன் சம்பத் தாம் கூறும் இந்துத்தேசியம் அல்லது இந்தியத்தேசியம் இரண்டிற்கும் இலக்கியம் மற்றும் கல்வெட்டுச் சான்றுகள் எதுவும் தரவில்லையே ஏன்? ஏனெனில், இந்து என்பதும், இந்தியா என்பதும் மிகவும் பிற்காலத்தில் மேற்கத்தியர் சூட்டிய பெயர்கள். தமிழ், சமற்கிருதம், இந்தி உள்ளிட்ட எந்த மொழியிலும் இருநூறு ஆண்டுகளுக்கு முன் இந்து என்ற மதப்பெயரும், இந்தியா என்ற நாட்டுப் பெயரும் கூறப்படவில்லை. கூறப்படாததற்குக் காரணம் இந்து என்ற பெயரில் மதமோ, இந்தியா என்ற பெயரில் நாடோ, இந்தியர் என்ற பெயரில் இனமோ 200 ஆண்டுகளுக்கு முன் இல்லாததுதான்.


இதோ காலஞ்சென்ற பெரியவர் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திரர் கூறுகிறார் :
“நமக்குள் சைவர்கள், வைஷ்ணவர்கள் என்று வேறாகச் சொல்லிக் கொண்டிருந்தாலும் வெள்ளைக்காரன் நமக்கு இந்துக்கள் என்று பொதுப் பெயர் வைத்தானோ நாம் பிழைத்தோம். அவன் வைத்த பெயர் நம்மைக் காப்பாற்றியது.
- தெய்வத்தின் குரல், பாகம் – 1, பக்கம் 267.

மேலும் சொல்கிறார் :
“எத்தனையோ கிருத்திருமங்கள் செய்து பாகிஸ்தானைப் பிரித்த அதே வெள்ளைக்காரன்தான், எத்தனையோ யுக்திகள் செய்து நம்மை ஆரியர் திராவிடர் என்றெல்லாம் பேதப்படுத்திய அதே வெள்ளைக்காரன்தான் தன்னையும் அறியாமல் நமக்கு ‘இந்து’என்று பொதுப் பெயரைத் தந்து, இன்று இந்தியதேசம் என்று ஒன்று இருக்கும்படியான மகாபெரிய நன்மையைச் செய்திருக்கிறான்”.

பழங்காலத்தில் “பாரததேசம்” என்ற பெயரில் இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் ஒரு தேசமாக இருந்ததாக ஒரு சாரார் சொல்லி வருகிறார்கள். அதற்கான இதிகாசச்சான்று, புராணச்சான்று, வரலாற்றுச் சான்று எதுவுமில்லை.

இன்று இந்தியா என்று சொல்லப்படும் நிலப்பகுதியில் பழங்காலத்தில் 56 தேசங்கள் இருந்ததாக “மகாபாராதம்” கூறுகின்றது.

1918 இல் வெளிவந்த, “புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள்” என்ற நூலில் அதன் ஆசிரியர் பி.வி. ஜகதீச ஐயர், 56 தேசங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதில், குருதேசம், சூரசேனதேசம் என்று தொடங்கி 56 ஆவது தேசமாக கர்னாடக தேசம் குறிப்பிடப்படுகிறது. அந்த 56 இல் சீனதேசம், பாஞ்சாலதேசம், பாரசீக தேசம், காந்தார தேசம், காம்போஜ தேசம், சோழ தேசம், பாண்டிய தேசம், கேரள தேசம் போன்றவை இருக்கின்றன. ஆனால், பாரததேசம் என்பது இல்லை.

வெள்ளைக்காரக் கிழக்கிந்திய கம்பெனி தான் கைப்பற்றிய தனித்தனி நாடுகளை ஒற்றை நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர முதல் முதலாக 1773 இல் இந்தியா ஒழுங்குமுறைச் சட்டம் (Regulating Act of 1773) இயற்றியது. அதற்கு முன் இந்தியா என்ற பெயரிலோ அல்லது பாரதம் என்ற பெயரிலோ இந்த நிலப்பகுதி ஒரே நாடாக – ஒரே தேசமாக இருந்ததே இல்லை. வெள்ளைக்காரர் உள்ளிட்ட மேற்கத்தியர் சிந்து ஆற்றின் பெயரை அடையாளமாகக் கொண்டுதான் இந்தியா, இந்து என்ற பெயர்களை உருவாக்கினார்கள்.

இலக்கியங்களில் தமிழ்நாடு
தமிழ்நாடு என மொழியின் பெயரில் ஒரு நாடு, ஒரு தேசிய இனம் இருந்ததாக இலக்கியக் குறிப்பு இல்லை என்கிறார் அர்ஜூன் சம்பத். இதோ இருந்ததற்கான சான்றுகள் :

“வையக வரைப்பில் தமிழகம் கேட்பப்…” – புறநானூறு, 168.

“தமிழகப் படுத்த விமிழிசை முரசின்..” – அகநானூறு, 227.

“தண்டமிழ் வேலித் தமிழ்நாட்டகம் எல்லாம்..” – பரிபாடல், 410.

“இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய..” – சிலப்பதிகாரம், காட்சிக்காதை, 165.

“தென் தமிழ்நாட்டு அதன் பொதியில்..” – கம்பராமாயணம், சுக்ரீவன் கூற்று.

“தமிழ்நாட்டில் போனார் ஞானத் தலைவர்” – சேக்கிழார், பெரிய புராணம், 21 திருநாவுக்கரசு நாயனார் புராணம் பகுதி, பாடல் எண் – 289.

“அரும்பெறல் தமிழ்நாடுற்ற தீங்கினுக்கு” – பெரிய புராணம், திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணம் பகுதி, பாடல் எண் – 604.

தொல்காப்பியத்தில் “செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல்” என்பது 496ஆம் நூற்பா. வினாவும் அதற்கான விடையும் தவறில்லாமல் – குழப்பமில்லாமல் இருக்க வேண்டும் என்பது இதன் பொருள். இதற்கு உரை எழுதிய இளம்பூரணர் குழப்பமில்லாத வினாவுக்கும் விடைக்கும் ஓர் எடுத்துக்காட்டு கூறினார்.

“எடுத்துக்காட்டாக, நும்நாடு யாது என்றால் தமிழ்நாடு என்றல்” என்று கூறினார்.

உன் நாடு எது என்றால் சோழ நாடு, பாண்டிய நாடு என்று சொல்வது குழப்பமானது. அப்பெயர்கள் அரச பரம்பரை சார்ந்த ஆட்சிப் பகுதிகள். அவை நாடன்று; தமிழ்நாட்டில் பல்வேறு அரசர்களின் ஆட்சி இருக்கிறது என்ற பொருளில்தான் இந்த எடுத்துக்காட்டை இளம்பூரணர் கூறுகிறார்.

தமிழர் என்ற இனப்பெயர் சங்க இலக்கியம் தொட்டு, பல்வேறு இலக்கியங்களில் காணப்படுகிறது.

“தமிழ் தலை மயங்கிய தலையாலங்கானத்து” – புறம், 19.

தலையாலங்கானம் என்ற இடத்தில் பாண்டியன் நெடுஞ்செழியன் சேர, சோழ – தமிழ்ப் படைகளை வென்றான். இரு தரப்பிலும் தமிழர்கள் போரிட்டனர். எனவே யார் எந்தப் பக்கம் போரிடுகின்றனர் என்பது குழப்பமாயிருந்தது. இங்கு தமிழ் என்றது தமிழரைக் குறித்தது.

“செறிகழல் வேந்தன் தென்தமிழ் ஆற்றல்
அறியாது மலைந்த ஆரிய மன்னர்” என்று “தமிழ்” என்பதைத் தமிழர் என்ற பொருளில் கூறினார் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள்.

அதன்பிறகு – வந்த அப்பர் (திருநாவுக்கரசர்) “ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்” என்று ஆரியரும், தமிழரும் வெவ்வேறு இரு இனத்தார் என்பதைத் தெளிவாகக் கூறினார். பூதத்தாழ்வார் “இருந்ததமிழ் நன்மாலை இணையடிக்கே சொன்னேன், பெருந்தமிழன் நல்லேன் பெரிது” என்று தன்னைப் பெருந்தமிழனாகக் கூறி பெருமைப் பட்டார்.

எனவே இலக்கியங்களில் தமிழர் என்ற இனம் குறிக்கப்படவில்லை என்று அர்ஜூன் சம்பத் கூறுவது சரியன்று.

தேசிய இன வரையறை

“வெறும் மொழியின் அடிப்படையில் மட்டும் தேசிய இனம் அமையாது” என்கிறார் அர்ஜூன் சம்பத். ஆனால், இவர் சார்ந்துள்ள இந்துத்துவா அமைப்பு இல்லாத இந்தியத்தேசிய இனத்திற்கு இந்தி மற்றும் சமற்கிருதம் இரண்டையும் ஏற்றாக வேண்டும் என்று நிபந்தனை போடுகிறது. இனம் (Race), தேசிய இனம் (Nationality) ஆகியவை உருவாவதற்கான முதன்மைக் கூறு தாய்மொழி. கிரேக்கர், ஆங்கிலேயர், பிரஞ்சியர், சப்பானியர் போன்ற தேசிய இனங்கள் அவரவர் தாய்மொழியை அடிப்படையாகக் கொண்டுதான் உருவாகின. அர்ஜூன் சம்பத் சொல்வதுபோல், மொழி வெறும் கருவியன்று.

தாய்மொழி, தாயகம், பண்பாடு, பொருளியல் வாழ்வு ஆகியவற்றில் பொதுத்தன்மை கொண்டு, வரலாற்றில் நிலைத்து வாழ்பவர்கள் “நாம் ஓரினம்” என்ற மனப்பாங்கு வளரப் பெறுகின்றனர். இதற்கு முன் நிபந்தனையாக இனக்குழு (Ethinicity) மரபு உருவாகிறது. இனக்குழு மரபிலிருந்து ஒரு மூல மொழி தொடர்கிறது. தமிழர்களுக்கு மூலமொழியாகவும் (Dialect) வளர்ச்சியடைந்த பொது மொழியாகவும் (Standard Language) இருப்பது தமிழே.

தேசிய இன அடிப்படையில் இறையாண்மையுடன் தனித்தனி தேசங்கள் அமைவது 18 – 19ஆம் நூற்றாண்டில் தொடங்கியது. அதனால், தேசிய இன உணர்வே அதன்பிறகுதான் உருவானது என்று கொள்ளக் கூடாது. யூதர்களுக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இன உணர்வு இருந்தது. தமிழர்களுக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இன உணர்வு இருந்ததால்தான், இன அடிப்படையிலான தாயக எல்லையாக வடவேங்கடம் குமரிமுனை இடையிலுள்ள தமிழ் பேசும் பகுதியை தொல்காப்பியம் பாயிரத்தில் பணம்பாரனார் கூறினார். அதேபோல், தமிழகம் – தமிழ்நாடு – தமிழர் என்ற இன உணர்வு வெளிப்பாடுகள் சங்க இலக்கியத்திலிருந்து தமிழர்களுக்குத் தொடர்கிறது.

மதம் ஒரு தேசியத்திற்கோ அல்லது தேசிய இனத்திற்கோ அடிப்படைக் கூறாக அமைவதில்லை. மதம் – ஒரு மெய்யியல் என்ற அளவில் இனம் கடந்து, மொழி கடந்து பரவும். ஐரோப்பா ஒரே கிறித்துவ தேசமாக அமையவில்லை. அரபு நாடுகள் ஒரே இசுலாமிய தேசமாக அமையவில்லை. மதம் ஒன்றாக இருந்தாலும், மொழி இன அடிப்படையில் அவை தனித்தனி நாடுகளாக இருக்கின்றன. அரசமைப்புச் சட்டத்திலேயே இந்து மதத்திற்கு முதன்மை கொடுத்த இந்து நாடு - நேப்பாளம். இப்போது புதிதாக வந்துள்ள அரசமைப்புச் சட்டத்தில்தான் அப்பிரிவு நீக்கப்பட்டுள்ளது. ஆனால், “இந்துதேசம்” என்று இந்தியாவை அழைக்க விரும்புவோர் நேப்பாளமும் இந்தியாவும் தனித்தனி நாடாக இருப்பதை உணர வேண்டும்.

இந்திய அரசமைப்புச் சட்டம் இந்தியாவை ஒரு தேசம் (Nation) என்று கூறவில்லை. அரசுகளின் ஒன்றியம் (Union of States) என்றுதான் குறிப்பிடுகிறது (உறுப்பு – 1). ‘இந்தியன்’ (Indian) என்ற பெயரில் ஒரு தேசிய இனம் இருப்பதாக இந்திய அரசமைப்புச் சட்டம் கூறவில்லை. இந்தியக் குடியுரிமை (Citizenship) பற்றி மட்டுமே அது வரையறை செய்கிறது.

இல்லாத இந்திய தேசியத்தை – இந்து தேசியமாக மாற்றிக் கொண்டு, தமிழ்த்தேசிய இனம் போன்ற இயற்கையான இனங்களின் மொழி, பண்பாடு, அரசுரிமைகள் முதலியவற்றை மறுக்கக் கூடாது. இந்தியா ஒரு நிர்வாகக் கட்டமைப்பு; அதில் பல தேசிய இனங்கள் இருக்கின்றன.

தோழர் பெ. மணியரசன்
தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்


பின் குறிப்பு: இக்கட்டுரை எமது ஆக்கம் அல்ல. முகநூல் பதிவு ஒன்றில் இதனைக் காண நேர்ந்தது. ஆனாலும், கட்டுரையின் சிறப்புக் கருதி மீள் பதிவு செய்கிறோம். இதனை முடியுமான மட்டும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். வரலாற்றை மாற்று முயல்வது நமக்கு வரலாறு தெரியாததால் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நன்றி தோழர் பெ. மணியரசன்