யூத, கிறிஸ்தவ, இஸ்லாம் சமயங்கள்

யூத, கிறிஸ்தவ, இஸ்லாம் சமயங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புபட்டவை. அதேபோல் வேறுபாடுகளும் கொண்டுள்ளன. ஆனால் தாங்கள்தான் சரியானவர்கள் என்பதை நிறுவுவதில் ஒவ்வொருவரும் முனைப்பாகவுள்ளனர்.
யூத, கிறிஸ்தவ, இஸ்லாம் சமயங்கள்

யூதம்

சுமார் கி.மு 2000 இல் எபிரேயர்களின் மூதாதையர் ஒருவரால் (ஆபிரகாம்) இச்சமயத்தின் ஆரம்பம் உருவாகியது. யூதம் கிட்டத்தட்ட 3500 வருடங்கள் பழமையானது. ஓரிறைக் கொள்கையுடைய பழமையான சமயங்களில் இதுவும் ஒன்றாகவும், ஒரு கடவுள் கொள்கையுடைய பிரதான சமயங்களில் ஒன்றாகவும் இது உள்ளது. ஆயினும், 12 மில்லியன் பேரை அங்கத்தவர்களாகக் கொண்ட இது சிறிய சமயமாகவுள்ளது. எருசலேம் இச்சமயத்தின் புனித நகராகவுள்ளது. யூத நாட்காட்டி 29 அல்லது 30 நாட்களைக் கொண்டதால், 12.13 மாதங்களைக் கொண்டுள்ளது.


ஒரே கடவுள் இருப்பதாக நம்பும் யூதர்கள். அக்கடவுள் இந்த அண்டத்தை மாத்திரம் படைத்தவராக மட்டும் இல்லாது, ஒவ்வொரு யூதருடனும் தனிப்பட்ட ரீதியான உறவைக் கொண்டிருக்கக்கூடியவராகவும் கருதுகின்றனர். அவர்கள் உலகத்துக்குரிய அரசனான, மீட்பர் ஒருவருக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். பரலோகம் இருக்கிறதென்று நம்பினாலும், கடவுள் உலக வாழ்வை முடித்தவர்கள் எங்கு செல்ல வேண்டும் என முடிவெடுப்பார் என நம்புகின்றனர். பத்துக்கட்டளைகள் அடிப்படை சட்ட விதியாகவுள்ளது.

எபிரேய விவிலியத்தில் (டனாக்) உள்ள ஐந்து நூல்கள் அடங்கிய தோரா மிகவும் புனித நூலாகும். தோரா சீனாய் மலையில் வைத்து கடவுளால் மோசேக்குக் கொடுக்கப்பட்டது. தல்மூத் எனப்படும் யூத வாய்வழி, எழுதப்பட்ட நூலும் முக்கிய இடம் பெறுகின்றது. எபிரேயம் வலமிருந்து இடமாக வாசிக்கப்படும்.

யூதர்களுக்கு கோயிலாக எருசலேம் தேவாலயம் மட்டுமே உள்ளது (தற்போது இல்லை). தொழுகைக்கூடங்கள் அவர்கள் வழிபாடு செய்யும் இடமாகவுள்ளது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் வழிபாட்டுக்கென தனியான இடங்கள் உள்ளன. வழிபாட்டினை யூதப் ராபி (போதகர்) வழிநடத்துவார். சனிக்கிழமை ஓய்வுநாளாகவும் வழிபாட்டிற்குரியதாகவும் உள்ளது.


கிறிஸ்தவம்

எருசலேமில் சுமார் கி.பி 30 இல் சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்துவை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெற்றது. இயேசுவின் மரணத்தின் பின் அவரைப் பின்பற்றியவர்களால், அவர் மீட்பராக (மெசியா) ஏற்றுக் கொள்ளப்பட்டார். கிறிஸ்தவம் உலகில் உள்ள மிகப் பெரிய சமயமாக உள்ளது. அதில் 2.2 பில்லியன் பேர் உள்ளனர். கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு முன் புனித பூமியில் இயேசு போதித்த போதனைகளை அடிப்படையாகக் கொண்டது.

கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவை கடவுளின் மகனாக நம்புகின்றனர். மேலும், பாவத்திலிருந்து மனித குலத்தை மீட்க தன் மகனை அனுப்பினார் என்றும், இயேசு சிலுவையில் அறையப்பட்டு, மரணித்து, மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார் என்றும் நம்புகின்றனர். பழைய ஏற்பாட்டில் வாக்களிக்கப்பட்ட மீட்பர் இயேசுதான் என்ற நம்பிக்கையைக் கொண்டுள்ளனர். கடவுள் ஒருவர் என நம்பினாலும் மூன்று பேராக உள்ளார் என நம்புகின்றர். கடவுள்தான் உலகைப் படைத்தார் என்ற நம்பிக்கையைக் கொண்டுள்ளனர்.

கிறிஸ்தவர்கள் கடவுளுடன் தனிப்பட்ட உறவு வைத்துக் கொள்ளலாம் எனவும், செயலினால் அல்ல விசுவாசத்தினால் மீட்கப்பட்டதாகவும் நம்புகின்றனர். இறையருள் முக்கியத்துவம் பெறுகின்றது. இவர்கள் பரலேகமும் நரகமும் இருப்பதாக நம்புகின்றர். விவிலியம் கடவுளின் வார்த்தையைக் கொண்டது என நம்புகின்றனர். இவர்கள் உழைப்பில் பத்தில் ஒரு பாகமும் காணிக்கையும் செலுத்த வேண்டும். விவிலியம் புனித நூலாக உள்ளது. இது பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு எனப் பிரிக்கப்பட்டுள்ளது. பழைய ஏற்பாடு யூதர்களின் புனித நூலாகவுள்ளது. இவர்கள் கடவுளை வழிபாடு செய்யும் இடம் சபை, தேவாலயம், கோயில் என்ற பெயர்களினால் அழைக்கப்படுகின்றது. இது பலிப்பீடத்தைக் கொண்டு அமைக்கப்படும். பூசை மற்றும் வழிபாடு முறையே குருக்களாலும் போதகர்களினாலும் வழிநடத்தப்படும். பொதுவாக வழிபாட்டுக்குரிய நாள் ஞாயிற்றுக் கிழமையாகும்.

இஸ்லாம்

கி.பி 610 இற்கும் 632 இற்கும் இடைப்பட்ட காலத்தில் முகம்மதுவினால் உருவாக்கப்பட்டது. ஆயிரம் மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட இது உலகில் இரண்டாவது பெரிய மதமாகும். இது அரேபியாவில் ஆரம்பிக்கப்பட்டு, முகம்மதுவினால் அறிமுகப்படுத்தப்பட்டது. இஸ்லாமைப் பின்பற்றுபவர்கள் முஸ்லிம்கள் என அழைக்கப்படுவார்கள். முஸ்லிம்கள் அல்லா என்ற கடவுள் ஒருவரே என்ற கொள்கையுடையவர்கள். இஸ்லாமிய நாட்காட்டி 354 நாட்களை, 12 வளர்பிறையை அடிப்படையாகக் கொண்ட அமைக்கப்பட்டது.

முஸ்லிம்களின் புனித நூல் குரான் ஆகும். இது கடவுளின் வார்த்தையைக் கொண்டது என்று நம்புகிறார்கள். குரானின் அடிப்படையில் நம்பிக்கையும் செயல்முறையும் அமைந்துள்ளது. குரான் அல்லாவிடமிருந்து வந்ததாக நம்பும் இவர்கள் அதற்கு மிகுந்து மரியாதை அளிக்கிறார்கள். அரபி மொழியில் எழுதப்பட்ட இது வலமிருந்து இடமாக வாசிக்கப்படும்.

முஸ்லிம்கள் கடவுளைத் தொழுதுகொள்ள கூடும் இடம் மசூதி அல்லது பள்ளிவாசல் என அழைக்கப்படும். பள்ளிவாயில் தூபியிலிருந்து 5 நேர தொழுகைக்காக அழைக்கப்படுவார்கள். இவர்களின் பொதுவான தொழுகை நாள் வெள்ளிக்கிழமையாகும்.

அல்லாவைத் தவிர வேறு கடவுள் இல்லை எனவும் முகம்மது கடவுளால் அனுப்பப்பட்ட இறைதூதர் என விசுவசித்தல், ஐந்து நேரம் தொழுதல், உழைப்பில் ஒரு பங்கை தான, தர்மம் செய்தல், ரம்ழான் மாதத்தில் நோன்பு இருத்தல், வாய்ப்பு இருந்தால் வாழ்வில் ஒருமுறையாவது மக்காவிற்குச் செல்லுதல் என்பன முஸ்லிம்களின் அடிப்படைக் கடமையாகும்.

ஒற்றுமையும் வேற்றுமையும்

யூதம் கிறிஸ்தவத்தையும் இஸ்லாமையும் தங்கள் சமயத்தின் பகுதியாகவோ அல்லது தொடர்புபட்டதாகவோ ஏற்றுக் கொள்வதில்லை. யூதத்தைப் பொருத்தவரை இரு சமயங்களும் போலியானவை. கிறிஸ்தவம் யூதத்தை தங்கள் சமயத்தின் முன்னோடிகளாகவும், தங்களுடன் தொடர்புபட்டவர்களாகவும் ஏற்றுக்கொள்கிறது. ஆனால், இஸ்லாமை ஏற்றுக்கொள்ளவில்லை. யூதத்தினதும் கிறிஸ்தவத்தினதும் கொள்கைகளைத் திரிபுபடுத்தி உருவாக்கிய சமயம் என்கின்றது. இஸ்லாம் யூதத்தையும் கிறிஸ்தவத்தையும் தங்களுடன் தொடர்புபட்டவர்களாக ஏற்றுக் கொள்கிறது.


விபரம் யூதம் கிறிஸ்தவம் இஸ்லாம்
கடவுள் ஒரே கடவுள் மூன்று ஆளான ஒரே கடவுள் ஒரே கடவுள்
கடவுளின் பெயர் யெகோவா யெகோவா (இயேசு, பரிசுத்த ஆவி) அல்லா
முக்கிய நாள் சனி ஞாயிறு வெள்ளி
முக்கிய நபர் ஆபிரகாம், மோசே இயேசு முகம்மது
புனித நூல் டனாக் விவிலியம் குரான்
புனித நகர் எருசலேம் எருசலேம் / உரோம் மக்கா, மதீனா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துக்களை நாகரீகமாக, வெளி இணைப்பு இன்றி பதிவு செய்யலாம். நாகரீகமற்ற, வெளியிணைப்புள்ள கருத்துக்கள் நீக்கப்படும்.