சேரமான் கணைக்கால் இரும்பொறை

சேரமான் கணைக்கால் இரும்பொறை சேர மன்னர்களில் ஒருவர். இவர் சேர மன்னர்களில் இரும்பொறை என்ற மரபினரைச் சேர்ந்தவர். இரும்பொறையினர் தொண்டி என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு சேர நாட்டின் ஒருபகுதியை ஆண்டு வந்தனர். இவர்களில் கணைக்கால் இரும்பொறை என்னும் மன்னன் ஒருவன் சிறப்புற்று விளங்கினான். அவன் அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம் ஆகிய அரசருக்குரிய அருங்குணங்கள் பலவற்றையும் கொண்டிருந்தார். வீரமும், ஈரமும் வாய்ந்தவனாகவும் விளங்கினார். கணைக்கால் இரும்பொறை வேந்தனாக விளங்கியதுடன் செந்தமிழ்க் கவிஞராகவும் திகழ்ந்தார். சங்கப் புலவர்களில் ஒருவராகிய பொய்கையார் என்னும் புலவரிடம் கற்று இனிய தமிழ்ப் பாடல்களை இயற்றும் ஆற்றல் வாய்ந்தவனாகவும் அவன் விளங்கினார்.

சேரமான் கணைக்கால் இரும்பொறை

சேரமான் கணைக்கால் இரும்பொறைக்கும் அக்காலத்தில் சோழ நாட்டை ஆண்ட பெருவேந்தன் கோச்செங்கணானுக்கும் உள்ளூரப் பகைமை இருந்தது. கோச்செங்கணான் ஒப்புயர்வற்ற பெருவீரம் கொண்ட சிறந்த சிவ பக்தர். ‘எண்டோள் ஈசர்க்கு எழில்மாடம் எழுபது செய்து உலகம் ஆண்டவன்’ என்று புகழ் பெற்றவன். தமிழ் மொழியினிடத்தும், தமிழ்ப் புலவர்களிடத்தும் தணியாத வேட்கை கொண்டவர். இவ்விருவர்க்கும் ஏற்பட்ட பகையுணர்ச்சி நாளடைவில் வளர்ந்து பெருகிச் சிறு பொறியே பெருந்தீயானது போலப் பெரும் போராய் மூண்டது. இரு வேந்தரும் தம் பெரும் படைகளுடன் திருப்போர்ப்புறம் என்னும் இடத்தில் சந்தித்தனர். போர் தொடங்கியது. முடிவில் சேரர் படை தோல்வியடைந்தது. செங்கணான் இரும்பொறையைச் சிறைப்படுத்தினார்.


செங்கணான் சிறைப்பட்ட சேர வேந்தனைக் குடவாயிற் கோட்டம் என்னும் இடத்தில் சிறை வைத்தார். மானமே பெரிதென மதிக்கும் மன்னனாகிய இரும்பொறை தனக்கு ஏற்பட்ட அவமானத்தை எண்ணி எண்ணி அகம் வருந்தினார். செங்கோல் ஏந்தும் கையில் சங்கிலியைப் பிணைத்து இழுத்து வரப்பெற்ற தன் இழிவை நினைத்து உள்ளம் குமுறினார். போர்க்களத்திலேயே மாண்டு மடிந்திருந்தால் இந்த அவலநிலை ஏற்பட்டிராதன்றோ என்று ஏங்கினார். தனக்கு நேர்ந்த இந்த அவமானம் தன்னோடொழியாது சேரர் பரம்பரைக்கே பேரவமானமாக நிலைத்து விட்டதே என்று கலங்கினார். இத்தகைய மான உணர்ச்சியால் உணவும் உண்ணாமல் உறங்கவும் செய்யாமல் உள்ளமும் உடலும் சோர்ந்து கிடந்தார்.

கவலையாலும் பசியாலும் வாடிக் கிடந்த கணைக்கால் இரும்பொறைக்குக் களைப்பு மேலிட்டது. கண்கள் இருண்டன. நா உலர்ந்தது. தாங்க முடியாத நீர் வேட்கை உண்டாயிற்று. அதனால் அவன் நிலைகுலைந்து அச்சிறைக் காவலனை நோக்கிச் சிறிது நீர் கொணருமாறு பணித்தார். அச்சிறைக் காவலன் செருக்கு மிக்கவன். உணவுண்ணாமல் வாடிக் கிடக்கும் மன்னன் நிலைகண்டு மனம் பதறாமல் வாளா இருந்தான். நெடுநேரமாகியும் அவன் நீர் கொண்டு வந்து தரவில்லை. சிறைக்காவலன் கூட அவரை அலட்சியமாகக் கருதினான். இதனை நினைத்து நெஞ்சு புழுங்கினார் இரும்பொறை. சேர வேந்தன் இவ்வாறு சிந்தை நொந்து துடிக்கும் போது, வெந்த புண்ணில் வேல் நுழைத்தலைப் போல அச்சிறைக் காவலன் நீண்டநேரம் கழித்து ஒரு பாத்திரத்தில் சிறிது நீரைக் கொண்டு வந்து இடக்கையால் அலட்சியமாக வைத்துச் சென்றான்.

இதைக் கண்ட இரும்பொறையின் கண்கள் சிவந்தன. சினத்தால் அவர் உடல் நடுங்கியது. சிறைப்பட்ட அவன் சினம் யாரை என்ன செய்யும்? என்றாலும் தனக்கு ஏற்பட்ட பேரவமானத்தை அவரால் தாங்கமுடியவில்லை. “ஆ! என்னே என் இழிநிலை! போர்க்களத்தில் வீரப்போர் புரிந்து இறத்தலே எம் போன்ற வேந்தர்க்கு அழகு! அங்ஙனம் இன்றி நோய் முதலியவற்றால் இறந்தாலும் அவர்களும் போர்க்களத்தில் இறந்ததற்கு அறிகுறியாக அவர்கள் உடலை வாளால் பிளந்து அடக்கம் செய்வது மன்னர் குல மரபன்றோ? குழந்தை பிறந்து இறந்தாலும், உருவமற்ற மாமிசப் பிண்டமாகப் பிறந்தாலும் அவற்றையும் வாளால் பிளந்து அடக்கம் செய்வதில் தவற மாட்டார்களே! அத்தகைய மன்னர் பரம்பரையில் என்னைப் போல இழிந்தவன் ஒருவன் பிறக்கலாமோ? போர்க்களத்தில் பகைவன் வாளால் பிளக்கப்படாமல் சிறைப்பட்டேனே! நாயைச் சங்கிலியால் கட்டி இழுத்து வருவது போல இழுத்து வந்து இச்சிறையில் தள்ளித் துன்புறுத்தியும் நான் சாகாமல் வாழ்கிறேனே! உண்ணாமல் உயிர் விடத் துணிந்த நான் இவ்வற்பனிடம் இந்நீரை யாசிக்கக்கூடாது என்ற மனவுறுதியில்லாமல் நீரைக் கேட்டு மானம் இழந்தேனே! இங்ஙனம் மானம் இழந்தும் நான் உயிர் வாழலாமோ?” என்று அனலிடைப்பட்ட புழுவெனத் துடித்தார் இரும்பொறை.

அதனால் சேர மன்னன் சிறைக்காவலன் கொண்டு வந்து வைத்த நீரைப் பருகாமல் உயிர்விடத் துணிந்தார். தன் உள்ளக் குமுறலை அழகிய செந்தமிழ்ப் பாடலாக ஓர் ஓலையில் வடித்து வைத்தார். புறநானூறு குறிப்பிடும் அப்பாடல் பின்வருமாறு:

“குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
ஆளன்று என்று வாளில் தப்பார்
தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்திரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்
மதுகை இன்றி வயிற்றுத் தீத்தணியத்
தாமிரந் துண்ணும் அளவை
ஈன்மரோ இவ்வலகத் தானே”

நெஞ்சம் உருக்கும் இப்பைந்தமிழ்ப் பாடலைப் பாடிய இரும்பொறை, மானம் இழந்து வாழ்ந்தார் என்பதைவிடத் தன் மானத்தைக் காக்க உயிரையே துறந்தார்.

சிறையில் சேர வேந்தன் இறந்தது அறியாத செந்தமிழ்ப் புலவர் பொய்கையார் அவனைச் சிறை விடுவிக்க முயன்றார். சேரனின் அருமை பெருமைகளைச் சோழனுக்கு உணர்த்தி அவர்களிடையே ஒற்றுமையை வளர்க்க அரும்பாடுபட்டார். “களவழி நாற்பது” என்னும் சிறந்த நூல் ஒன்றினை இயற்றிச் செங்கணான் அவையில் அரங்கேற்றினார். அந்நூல் இரும்பொறையுடன் அவர் நடத்திய பெரும்போரில் அப்போர்க்களம் வழங்கிய கோரக் காட்சியைச் சித்திரிப்பதாகும். அதன் உட்பொருளை உணர்ந்த செங்கணான் தன்னால் விளைந்த பேரழிவினை எண்ணித் துன்புற்றார். தனக்கு அறிவுரை அளித்த புலவர் பொய்கையாரைப் பணிந்து, “புலவர் ஏறே! உங்கள் பொருள் மொழியால் நான் உண்மையை உணர்ந்தேன். மனம் தெளிந்தேன். இனிப் போர் புரியேன். எனக்கு தக்க சமயத்தில் இவ்வறிவுரை கூறிய தங்களுக்கு என்ன கைமாறு செய்வேன்?” என்று கூறினார்.

பொய்கையார், “வேந்தர் வேந்தே! உன் தெளிந்த உள்ளத்தைக் கண்டு உவக்கிறேன். நான் வேண்டுவன பொருளும் பொன்னும் போகமும் அல்ல. உன் அருளை வேண்டுகிறேன். இரும்பொறை என் செந்தமிழ் மாணவன். அவனைச் சிறையிலிருந்து விடுவித்து நீங்கள் இருவரும் ஒன்றிவாழ வேண்டும் என்பதே நான் விரும்பும் பரிசில்” என்றார்.

அவ்வுரை கேட்ட செங்கணான், “ஆ! சேரமன்னன் தங்கள் மாணவரா? தமிழறிந்த அவ்வேந்தரைச் சிறைப்படுத்தியது தமிழையே சிறைப்படுத்தியதாகும். வாருங்கள் இப்போதே அவரைச் சிறைவிடுத்து மன்னிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.” என்று கூறிப் புலவருடன் குடவாயிற் கோட்டம் சென்றார். ஆனால் அங்கு அவர்கள் கண்ட காட்சி அவர்களைப் பெரும் துன்பத்தில் ஆழ்த்தியது. இறந்து கிடந்தார் இரும்பொறை. அவர் எழுதி வைத்த பாடல் அவனுடைய மான வீரத்தை விளக்கி நின்றது. போரிலே வென்ற தன்னை இரும்பொறை மானத்திலே வென்று விட்டதறிந்து செங்கணான் கண்ணீர் சொரிந்தார். ஒப்பற்ற தமிழ்ப் புலவனான அவனைக் கொன்ற குற்றம் தன்னோடொழியாது சோழ பரம்பரைக்கே அழியாத களங்கமாய் நிலைத்து விட்டதை எண்ணி நாணினார். தன் பிழையை மன்னிக்குமாறு பொய்கையாரை வேண்டினார்.

பொய்கையார் செங்கணானை நோக்கி, “மானம் இழந்து உயிர்வாழ விரும்பாத இரும்பொறையின் செயல் மன்னர் பரம்பரைக்கே பெருமையளிப்பதாகும். இவன் மரணத்தால் தமிழ் வேந்தர்களாகிய நீங்கள் ஓர் உண்மையை உணர்தல் வேண்டும். இனியேனும் நீங்கள் உங்களுக்குள் பகைமை கொண்டு போர் புரியாமல் ஒற்றுமையோடு வாழ்ந்து தமிழ் நாட்டைப் பெருமைப் படுத்துவீர்களாக,” என்று அறிவுரை கூறித் தேற்றினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துக்களை நாகரீகமாக, வெளி இணைப்பு இன்றி பதிவு செய்யலாம். நாகரீகமற்ற, வெளியிணைப்புள்ள கருத்துக்கள் நீக்கப்படும்.