புனித பாதச்சுவடு

ஆதாமின் சிகரம் (Adam’s Peak), ஆதம் மலை, சிவனொளி பாதமலை, சிறிபாத மலை (Sri Pada)  என்றெல்லாம் அழைக்கப்படும் மலை இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம், பௌத்தம் ஆகிய சமயத்தவர்களின் முக்கிய இடமாகவும், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடமாகவும் உள்ளது. இது இலங்கையின் மத்திய மாகாணத்திற்கும் சப்ரகமுவ மாகாணத்திற்கும் இடையில் காணப்படும் மலை உச்சியில் சுமார் 5.5 அடி நீளத்திலும் 2.5 அடி அகலத்திலும் பாதச்சுவடை ஒத்த ஓர் அமைப்பு காணப்படுகின்றது. இந்த பாதச்சுவடு புத்தருடையது என பௌத்தர்களும், சிவனுடையது என இந்துக்களும், ஆதமுடையது என இஸ்லாமியரும், இயேசுவின் சீடர்களுள் ஒருவரான புனித தோமையாருடையது என கிறிஸ்தவர்களும் நம்புகின்றனர்.

புனித பாதச்சுவடு

பௌத்த நம்பிக்கையின்படி புத்தர் 35 அடி உயரம் உள்ளவர். ஆகவே அவருக்கு 5.5 அடி நீளமான பாதம் இருந்தது எனவும் நம்புகின்றனர். புத்தர் இலங்கைக்கு வந்தபோது அம்மலையில் தனது கால் தடத்தைப் பதித்தார் என பௌத்தர் நம்புகின்றனர். சங்கு, சக்கரம் போன்ற சின்னங்கள் புத்தரின் கால் தட சிற்பத்தில் காணப்படுவதுண்டு. சிறிபாத மலையில் உள்ள கால் தடத்திலும் இவ்வாறான சின்னங்கள் காணப்படுவதால் அது புத்தரின் கால்த்தடம் என பௌத்தர் நம்புகின்றனர். ஆனாலும் புத்தர் இலங்கை வந்தது பற்றிய நம்பகத்தன்மையில் கேள்விகள் உள்ளதால், இது புத்தரின் கால்த்தடந்தானா என்ற ஐயம் உள்ளது.

முஸ்லிம்களின் நம்பிக்கையின்படி, ஆதம் மலையில் இருப்பது இறைவனால்
படைக்கப்பட்ட முதல் மனிதனான ஆதமின் கால்த்தடம் ஆகும். இறைவனின் சாபத்தால் ஏதேன் தோட்டத்தில் இருந்து ஏவாளுடன் பூமிக்கு வந்தபொழுது இந்த ஆதம் மலையில்தான் முதன்முதலில் தங்கினார் என நம்பப்படுகின்றது. இந்த முதல் மனிதன் 30 அடி உயரம் உள்ளவர் என நம்பப்படுகின்றது. ஆனாலும் இது பற்றி குரானில் எவ்வித ஆதாரங்களும் இல்லை. எனவே, ஆதமின் கால்த்தடம் என்பது கேள்விக்குட்படுகின்றது. (ஆதம் என்பவரை ஆதாம் என கிறிஸ்தவர்கள் அழைப்பர்.)

கிறிஸ்த்தவர்களின் நம்பிக்கையின்படி, இயேசுவின் சீடர்களுள் ஒருவரான புனித தோமாவின் கால்த்தடம் என நம்பப்படுகின்றது. எனினும், புனித தோமா இலங்கைக்கு வந்ததற்கான வரலாற்று ஆதாரங்கள் இல்லை. மேலும், தோமாவும் நம்மைப் போன்ற பாத அளவையே கொண்டிருப்பதால், இந்த கால்த்தடம் அவருடையதுதானா என்பதில் கேள்வி எழுகின்றது. அத்துடன் கிறிஸ்தவர்கள் முதல் மனிதனான ஆதாமின் கால் தடம் அது என முஸ்லிம்களைப் போல நம்பிக்கை கொண்டிருந்தாலும், இது தொடர்பில் விவிலிய, கிறிஸ்தவ நூல்களும் எதுவும் கூறவில்லை.

இந்துக்களின் நம்பிக்கையின்படி, இங்குள்ள பாதம் சிவனுடையது என தெரிவிக்கப்படுகின்றது. முருகன் சூரபத்மனை அழித்தபோது சிவன் இந்த மலையில் இருந்து அதனைக்கண்டார் எனவும், அப்போது இந்த மிகப்பெரிய கால்த்தடமும் உருவானது என நம்புகின்றனர். ஆனாலும் இதற்கும் எவ்வித புராண குறிப்புக்களோ, இந்து சமய நூல் ஆதாரங்களோ, வரலாற்றுக் குறிப்புக்களோ இல்லை. எனவே சிவனுடைய பாதம் என்பதில் ஐயம் உள்ளது.

அப்போது யாருடையதுதான் இந்தப்பாதம்? இது இயற்கையாக உருவான பாத அமைப்பாகவோ அல்லது புராதன காலத்தில் மனிதனால் உருவாக்கப்பட்ட பாதச்சுவடு அமைப்பாகவோ இருக்கலாம். ஆனால், இந்த நான்கு சமயத்தவரும் அது தங்களுடையது என உரிமை கோருவதிலும், தங்களுக்கு இலங்கையில் மிகப்பழைய வரலாறு உள்ளது என காண்பிப்பதிலும் அக்கறை கொண்டு, உருவாக்கப்பட்டகட்டுக்கதைதான் ஆதாமின் சிகரம், ஆதம் மலை, சிவனொளி பாதமலை, சிறிபாத மலை என்ற பெயர்கள். அறிவியலின்படி, எந்த மனிதனும் 30-35 அடி உயரத்தைக் கொண்டிருக்கவில்லை. கடவுளின் பாதந்தான் அது என்றால், அதை உறுதி செய்யும் எந்தக் குறிப்புகளும் சமய நூல்களிலேயே இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துக்களை நாகரீகமாக, வெளி இணைப்பு இன்றி பதிவு செய்யலாம். நாகரீகமற்ற, வெளியிணைப்புள்ள கருத்துக்கள் நீக்கப்படும்.