புறம் பேசுதல்

ஒருவரைப் பற்றி பேசுவதற்கு பதிலாக ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டால் இந்த உலகில் பெரும்பாலான பிரச்சினைகள் மறைந்து விடும் என்பார்கள்.

புறம் பேசுதல் (gossip). ஒரு போதையாக மாறிவிட்ட காலம் இது. 

போதைப் பழக்கம், போதைக்கு அடிமையாகி இருப்பவரை மட்டுமின்றி அவரைச் சுற்றி இருப்பவர்களையும் பாதிப்பதைப் போல, புறம் பேசுதலும் பேசுபவரை மட்டுமில்லாமல் அவரைச் சுற்றி இருப்போரையும் பாதிக்கிறது.

உலக அளவில் 60 சதவீதம் மக்கள் ஒருவரைப் பற்றி மற்றவர் ஏதேனும் பேசுகிறார்கள் என்கிறது ஆய்வு ஒன்று.

மனரீதியாக தன்னம்பிக்கை இல்லாதவர்களும் பிறருடைய கவனத்தை தாங்கள் கவர வேண்டும் என நினைப்பவர்களுமே பெரும்பாலும் மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவார்கள். 

புறம் பேசுவதற்கு பல காரணிகள் இருந்தும்,இரண்டு  காரணங்கள் மிக முக்கியமானவை.

1. பொறாமை

நொடிப் பொழுதில் நிகழ்ந்துவிடும் தன்மைகொண்டது பொறாமை. தன்னிடம் இல்லாத ஒன்று பிறரிடம் இருக்கும்போது, அவர்மீது பொறாமை ஏற்படுகிறது. அவரிடத்தில் இருக்கும் அந்த ஒன்றோ அதைபோல் வேறு ஒன்றோ கிடைத்தால் அன்றி, பொறாமை போகாது. அல்லது அவர்களிடத்தில் அதைப் பற்றிய மதிப்பு குறைய வேண்டும்.

2. முக்கியத்துவ உணர்வு இழக்கப்படல்

நாம் இருக்கும் இடத்தில் எப்போதுமே ஓர் முக்கியத்துவ உணர்வைப் பெற விரும்புகிறோம். நண்பர்கள் மத்தியில், சுற்றி இருப்பவர்கள் மத்தியில், 'சிறந்தவர்' என்ற உணர்வைப் பெற விரும்புகிறோம். இந்த உணர்வை எல்லா இடத்திலும் நாம் எதிர்பார்ப்பதில்லை. நம்மைச் சுற்றி இருப்பவர்கள் மத்தியில் மட்டுமே எதிர்பார்கிறோம். தெரிந்த வட்டத்தில் சிறந்தவராக விளங்க வேண்டும் என்ற உணர்வு. அவ்வாறான முக்கியத்துவம் இழக்கப்படும் போது மற்றவர்கள் தொடர்பில் புறம் பேசத் தொடங்குகின்றார்கள்.

புறம் பேசப்படுபவர்களை மட்டுமல்ல பேசுபவர்களையும் கேட்பவர்களையுமே அது மனரீதியாகப் பாதிக்கும். உண்மையில் புறம் பேசு பவர்கள் தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொள்ளவே செய்கிறார்கள். இவர்கள் நம்பிக்கைக்குரியவர்கள் அல்ல என்ற எண்ணத் தைத்தான் பிறர் மனதில் விதைக்கிறார்கள். 

நீங்கள் ஒருவரைப் பற்றி என்ன பேசுகிறீர்களோ அது முதலில் நீங்கள் யார் என்பதையே பிரதிபலிக்கும். தவிர அது அவருக்கு என்ன விளைவை ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணுகிறீர்களோ அந்த விளைவு உங்களிடம் இருந்தே ஆரம்பம் ஆகும். 

மற்றவர்களை மகிழ்ச்சி படுத்துவது அவர்களுக்கு தரும் மறுமலர்ச்சி அல்ல அது உங்களுக்கே மகிழ்ச்சிதரக் கூடியது. இதைப் புரிந்து கொண்டால் மகிழ்ச்சி மனதில் நிறையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துக்களை நாகரீகமாக, வெளி இணைப்பு இன்றி பதிவு செய்யலாம். நாகரீகமற்ற, வெளியிணைப்புள்ள கருத்துக்கள் நீக்கப்படும்.