கடமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வறியவர்களின் பசியைப் போக்குங்கள்

வீடு வீடாக பொருட்களை விநியோகிக்கும் அந்த சிறுவனுக்கு மிகவும் பசித்தது. எதையாவது வாங்கிச் சாப்பிடலாம் என்றால் கையில் பணமே இல்லை. அருகில் இருந்த வீட்டில் ஏதாவது சாப்பிட கேட்கலாம் என்று நினைத்தான்.

அந்த வீட்டின் கதவைத் தட்டினான். ஒரு பெண் கதவைத் திறந்தாள். ஏதாவது கேட்கலாம் என்று நினைத்தான். ஆனால் கூச்சம். கேட்க மனம்வரவில்லை.

“கொ… கொஞ்சம் தண்ணி கிடைக்குமா, குடிக்க?” தயக்கத்துடன் கேட்கிறான்.

அவள் சிறுவனின் கண்களில் இருந்த பசியை கவனிக்கிறாள். உள்ளே சென்றவள், ஒரு கோப்பை பாலைக் கொண்டு வந்து கொடுத்தாள்.

பாலைக் குடித்து பசியாறிய சிறுவன் கேட்டான் “நான் எவ்வளவு கடன்பட்டிருக்கிறேன்?”

“கடனா? அப்படி ஒன்றும் இல்லை. அன்பான செயலுக்கு விலை எதுவும் இல்லை என்று என் அம்மா சொல்லியிருக்கிறார்” அவள் சிரித்துக்கொண்டே சொன்னாள்.

“மிக்க நன்றி” சிறுவன் புன்னகையுடன் கடந்து சென்றான்.

ஆண்டுகள் கழிந்தன. கஷ்டப்பட்டு, முட்டி மோதி, படிப்பை முடித்த அந்த சிறுவன் மருத்துவம் படித்து, அந்த நகரிலேயே மிகப் பெரிய மருத்துவர் ஆனான். அந்த சமயத்தில் அந்த பெண்ணுக்கோ ஒரு கொடிய நோய் வந்தது.

அவர் பணியாற்றிய மருத்துவமனையிலேயே அவளும் அனுமதிக்கப்பட்டிருந்தாள். அந்த மருத்துவரிடமே அவளுடைய பரிசோதனையும் வந்தது. மருத்துவ அறிக்கையில் அந்த பெண்ணின் ஊர் பெயரை பார்த்ததும் அவருக்குள் ஒரு சின்ன மின்னல். விரைவாக மருத்துவ அறைக்குப் போய் அந்த பெண்ணை பார்த்தார். அவள் தான். தனது பசியாற்றிய அந்த தாயுள்ளம்தான்.

அன்று முதல் தனது அத்துனை உழைப்பையும் கவனத்தையும் செலுத்தி அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்தார். நீண்ட சிகிச்சைக்கு பின்னர் அவள் குணமானாள். பல இலட்சங்கள் செவவாயின. மருத்துவமனை அந்த பெண்ணுக்கு ஒரு நீண்ட பற்றுச்சீட்டை அனுப்பியது. இதை எப்படி கட்டப்போகிறோமோ என்று பதட்டத்துடன் அதை பிரித்தவள் திகைத்துப் போனாள்.

அந்த பற்றுச்சீட்டைடின் கடைசியில் கையால் ஒரு குறிப்பு எழுதப்பட்டிருந்தது.

“இந்த பற்றுச்சீட்டை நீங்கள் செலுத்தவேண்டியதில்லை. ஒரு கோப்பை பாலில் உங்கள் கடன் முழுதும் தீர்க்கப்பட்டுவிட்டது. இது நன்றி சொல்லும் நேரம்!”

அவளுக்கு கண்கள் பனித்தன.

அந்த சிறுவன் வேறு யாருமல்ல அமெரிக்காவின் மிகப் பிரபல மருத்துவராக விளங்கிய கோவாட் கெலிதான் (1858-1943).

இங்கே ஒரு குறள் நினைவுக்கு வருகிறது.

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்

பெற்றான் பொருள்வைப் புழி. (குறள் 226)

பொருள்: வறியவர்களின் பசியைப் போக்குங்கள். அதுதான் செல்வம் பெற்ற ஒருவன் பிற்காலத்துக்கு தனக்கு உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும். 


பெரியார்

பெரியார் வாழ்க்கையின் கடைசி நாட்களில் ஆற்றிய செயல்கள் நமக்கு உணர்த்துபவை என்ன?

பெரியார்

90 வது வயதில் 180 கூட்டம்.

91 வது வயதில் 150 கூட்டம்.

93 வது வயதில்  249 கூட்டம்.

94 வது வயதில் 229 கூட்டம்.

வாழ்க்கையின் கடைசி 98 நாட்களில் 

(95 வது வயதில்)  42 கூட்டம்.

இத்தனையும், கடும் நோயின் வலிகளுடன்தான் இடம்பெற்றன. 

குடலிறக்க பிரச்னையினால் சரிந்து விழும் குடலைப் இடுப்புப்பட்டி வைத்துக் கட்டிக் கொண்டு கூட்டங்களில் பேசச் சென்றார்.

சிறுநீர் கழிக்க வயிற்றுக்குப் பக்கவாட்டில் ஓட்டைப் போட்டு குழாய் செருகப்பட்டிருக்கும்.

இதையெல்லாம் எந்த ஆட்சியைப் பிடிக்கச் செய்தார்?

எத்தனை தலைமுறைக்கு சொத்து சேர்க்கச் செய்தார் ? 

அவருக்கும் கடவுளுக்கும் வாய்க்கால் தகராறா? 

மதங்களுக்கும் அவருக்கும் முன் விரோதமா ? 

நான் சொல்வதைக் கேட்டால் தான் உனக்கு சொர்கம்.

என்னை வணங்கா விட்டால் நரகம்  என்று கூறும் கடவுள்கள், சாமியார்களுக்கிடையில்...

நான் தலைவன். நான் தவறே செய்தாலும் எனக்கு நீ முட்டுக் கொடுத்தே ஆக வேண்டும் என்று கட்டளையிடும் தலைவர்கள் மத்தியில்...

யார் சொன்னாலும், நானே சொன்னாலும் உன் அறிவைக் கொண்டு, அனுபவத்தைக் கொண்டு, படிப்பினையைக் கொண்டு ஆராய்ந்து உன் அறிவு ஏற்றுக் கொண்டால் ஏற்றுக் கொள், இல்லையென்றால் விட்டுவிடு என்று சொன்ன ஒரே தலைவர் இவர் மட்டுமே.

பெரியார் இல்லை என்றால் இன்று தமிழ் உலகின் பகுத்தறிவு பக்கங்கள் சில கிடைத்திருக்காது.

ஜப்பானியரின் ஒழுக்கமும் கடமையுணர்ச்சியும்

2018 ஆம் ஆண்டு உதைபந்தாட்ட இரசிகர்களுக்கு முக்கியமான ஆண்டு. ஏனெனில் 2018 யூன்-யூலை மாதங்களில் உலகக்கோப்பை கால்பந்து போட்டி இடம் பெற்றது. நீண்ட போட்டிகளின் பின் 32 அணிகள் மாத்திரம் இப்போட்டிகளுக்குத் தெரிவாகின. உலகக்கோப்பையைக் கைப்பற்றுவது யார் என்ற போட்டியும் எதிர்பார்ப்புகளும் அதிகரித்திருந்தன. ஜப்பானும் இதில் கலந்து கொண்டிருந்தது.

ஜப்பானியரின் ஒழுக்கமும் கடமையுணர்ச்சியும்

ஆட்டமிழப்பு நிலைப் போட்டியின்போது ஜப்பான் அணி 2-3 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் தோல்வியுற்று வெளியேறியது. ஜப்பான் அணி கால்பந்து வீரர்களுக்கும், ஜப்பான் அணி இரசிகர்களுக்கும் பாரிய ஏமாற்றம். பலர் கண்ணீருடன் காணப்பட்டனர். நிச்சயமாக வேற எந்த செயலைச் செய்யவும் அவர்களுக்கு மணம் வந்திருக்காது.

ஜப்பான் அணியினர் உடையை மாற்றிவிட்டு, அங்கிருந்து கிளம்பிவிட்டனர். உடை மாற்றும் அறைக்குச் சென்ற உலகக்கோப்பை ஏற்பாட்டாளர்களுக்கு அதிர்ச்சியாகவிருந்தது. உடை மாற்றும் அறை மிகவும் நன்றாகச் சுத்தம் செய்யப்பட்டு, “நன்றி” என்று எழுதப்பட்ட ஓர் அட்டை அங்கு வைக்கப்பட்டு இருந்தது. அவ்வளவு பெரிய தோல்வியின் பின்னரும், அங்கிருந்த விளையாட்டு வீரர்களின் கடமையுணர்ச்சி குறையவில்லை. அவர்களின் ஒழுக்கமான வாழ்க்கை முறையும் தழும்பவில்லை.


அத்தோடு ஜப்பானியர்களின் ஒழுக்கமும் கடமையுணர்ச்சியும் நின்றுவிடவில்லை. விளையாட்டரங்கில் போட்டியைக் காண வந்த ஜப்பானிய இரசிகர்கள் போட்டி முடிந்த பின்னர் அங்கு கைவிடப்பட்டிருந்த குப்பைகளைச் சேகரித்து விளையாட்டரங்கை சுத்தப்படுத்தியதைக் காண முடிந்தது. ஏன் நமக்கு இந்த வீண் வேலை என்று செல்லும் இன்றைய உலகில், தோல்வியின் பின்னரும் ஒழுக்கம், கடமையுணர்ச்சி ஆகியவற்றைக் கைவிடாத ஜப்பானியர்கள் மிகவும் பாராட்டுக்குரியவர்கள்.

மேலும், குழு நிலை ஆட்டத்தில் ஜப்பானுக்கும் செனகல் நாட்டிற்கும் ஒரே அளவான புள்ளிகள்தான் இருந்தன. ஆனால் ஜப்பான் அடுத்த சுற்றிற்குத் தெரிவாகக் காரணம் அவர்கள் அதிகம் முறை தவறிய ஆட்டம் (foul) ஆடியிருக்கவில்லை. செனகல் அதிகமாக முறை தவறிய ஆடியதால் அடுத்த சுற்றிற்குச் செல்ல முடியாமல் தோற்றுவிட்டது.

ஜப்பானியர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள பலவிடயங்கள் உள்ளன. அதில் ஒழுக்கமும் கடமையுணர்ச்சியும்கூட உள்ளடங்குகின்றன.