ஆளுமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆளுமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பெரியார்

பெரியார் வாழ்க்கையின் கடைசி நாட்களில் ஆற்றிய செயல்கள் நமக்கு உணர்த்துபவை என்ன?

பெரியார்

90 வது வயதில் 180 கூட்டம்.

91 வது வயதில் 150 கூட்டம்.

93 வது வயதில்  249 கூட்டம்.

94 வது வயதில் 229 கூட்டம்.

வாழ்க்கையின் கடைசி 98 நாட்களில் 

(95 வது வயதில்)  42 கூட்டம்.

இத்தனையும், கடும் நோயின் வலிகளுடன்தான் இடம்பெற்றன. 

குடலிறக்க பிரச்னையினால் சரிந்து விழும் குடலைப் இடுப்புப்பட்டி வைத்துக் கட்டிக் கொண்டு கூட்டங்களில் பேசச் சென்றார்.

சிறுநீர் கழிக்க வயிற்றுக்குப் பக்கவாட்டில் ஓட்டைப் போட்டு குழாய் செருகப்பட்டிருக்கும்.

இதையெல்லாம் எந்த ஆட்சியைப் பிடிக்கச் செய்தார்?

எத்தனை தலைமுறைக்கு சொத்து சேர்க்கச் செய்தார் ? 

அவருக்கும் கடவுளுக்கும் வாய்க்கால் தகராறா? 

மதங்களுக்கும் அவருக்கும் முன் விரோதமா ? 

நான் சொல்வதைக் கேட்டால் தான் உனக்கு சொர்கம்.

என்னை வணங்கா விட்டால் நரகம்  என்று கூறும் கடவுள்கள், சாமியார்களுக்கிடையில்...

நான் தலைவன். நான் தவறே செய்தாலும் எனக்கு நீ முட்டுக் கொடுத்தே ஆக வேண்டும் என்று கட்டளையிடும் தலைவர்கள் மத்தியில்...

யார் சொன்னாலும், நானே சொன்னாலும் உன் அறிவைக் கொண்டு, அனுபவத்தைக் கொண்டு, படிப்பினையைக் கொண்டு ஆராய்ந்து உன் அறிவு ஏற்றுக் கொண்டால் ஏற்றுக் கொள், இல்லையென்றால் விட்டுவிடு என்று சொன்ன ஒரே தலைவர் இவர் மட்டுமே.

பெரியார் இல்லை என்றால் இன்று தமிழ் உலகின் பகுத்தறிவு பக்கங்கள் சில கிடைத்திருக்காது.

கரப்பான்பூச்சி கோட்பாடு

ஒரு உணவகத்தில் கரப்பான் பூச்சி ஒன்று எங்கிருந்தோ பறந்து வந்து ஒரு பெண் மீது அமர்ந்து கொண்டது. உடனே அந்தப் பெண் பயத்தில் கூச்சலிட ஆரம்பித்தார். மிகவும் கடினமாக, அந்தக் கரப்பானை அவர் மீதிருந்து விலக்க முயற்சித்துக் கொண்டிருந்தார். அதுவரை அமைதியாக இருந்த அவருடன் வந்தவர்களுக்கும் இப்பொழுது அந்த பதற்றம் தொற்றிக் கொண்டது.
கரப்பான்பூச்சி கோட்பாடு
கரப்பான்பூச்சி கோட்பாடு

ஒருவாறாக, அவர் அந்த கரப்பானை தன் மீதிருந்து விலக்கி விட்டார். ஆனால் அந்த கரப்பான் இப்பொழுது வேறொரு பெண் மீது சென்று அமர்ந்து கொண்டது. இப்பொழுது இந்தப் பெண் அதே போல் கூச்சலிட ஆரம்பித்தார். அமைதியாக இருந்த மொத்த உணவகமும் இப்பொழுது அமைதியிழந்து காணப்பட்டது.

இதை பார்த்துக் கொண்டிருந்த பணியாளர் சூழ்நிலையை சரி செய்ய விரைந்தார். இந்த முறை கரப்பான்பூச்சி, பறந்து சென்று அந்த பணியாளர் மீது அமர்ந்து கொண்டது. பணியாளர் தன்னை நிதானித்துக் கொண்டு தன் சட்டையின் மீது அமர்ந்திருக்கும் கரப்பானின் நடத்தையை கவனித்தார். அது தன் நகர்தலை நிறுத்தியதும், தன் விரல்களால் அதை பிடித்து உணவகத்திற்கு வெளியே வீசியெறிந்தார்.

நான் என் காபியைப் பருகிக் கொண்டே இதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். என் மனது இந்த நிகழ்ச்சியிலிருந்து சில கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தது. அவர்களின் அந்த நடத்தைக்கு கரப்பான்பூச்சி தான் காரணமா? அப்படியெனில் அந்தப் பணியாளர் ஏன் அதன் மூலம் அமைதி இழக்கவில்லை? அவர் மட்டும் எந்த ஆரவாரமுமின்றி அதை நேர்த்தியாகக் கையாண்டார். எனவே அந்த பெண்களின் நடத்தைக்கு கரப்பான் பூச்சி காரணம் அல்ல. அந்த கரப்பான்பூச்சி ஏற்படுத்தும் தொந்தரவைக் கையாள முடியாத அவர்களின் இயலாமை தான் அவர்களின் அந்த நடத்தைக்குக் காரணம்.

இதன் மூலம் நான் உணர்ந்தது என்னவெனில், என் தந்தை அல்லது மனைவி அல்லது முதலாளியின் கடுமையான பேச்சு என்னை அமைதியிழக்கச் செய்யவில்லை, அந்த வாக்குவாதத்தை கையாள முடியாத என் இயலாமை தான் என்னைத் தொந்தரவு செய்கிறது. என் அமைதியை குலைக்கிறது. சாலையில் உள்ள போக்குவரத்து நெரிசல்கள் என்னை தொந்தரவு செய்யவில்லை.

ஆனால், அந்த நெரிசல்களைக் கையாள முடியாத என் இயலாமை தான் என்னைத் தொந்தரவு செய்கிறது.

என் வாழ்வில் எந்தவொரு குழப்பத்தையும் எந்தவொரு சிக்கலும் உருவாக்குவதில்லை, அந்த குழப்பங்களுக்கு நான் செய்யும் எதிர்வினைகள் தான் சிக்கல்களை உருவாக்குகிறது. இதன் மூலம் நான் கற்றது வாழ்வில் நான் எதிர்வினை ஆற்றக் கூடாது, பதிலளிக்க வேண்டும். நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டு நடக்கும் நிகழ்ச்சிகள் நம்மிடம் உள்ள அனைத்தையும் பறிக்கக் கூடும் ஒன்றைத் தவிர. அது தான் ஒரு சூழ்நிலைக்கு நாம் எவ்வாறு பதிலளிக்கிறோம் என்பதைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம். வாழ்வில் நமக்கு நடக்கும் விஷயங்களை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அதற்கு நாம் எப்படி பதிலளிக்கிறோம் என்பதை நம்மால் கட்டுப்படுத்த முடியும்.

இந்தக் கதையை ஆழ்ந்து வாசித்து பயன்படுத்தினால், நீங்கள் இருக்கும் இடத்திலேயே வாழ்க்கையை கொண்டாட துவங்குவீர்கள்! நம் வெற்றியும், தோல்வியும் நம் கைகளில் தான் என்பதை உணர்வீர்கள்! வெற்றி, தோல்விகளை விட வாழ்க்கையை அனுபவித்து வாழக் கற்றுக் கொள்வீர்கள்!

நன்றி: முகநூல் பதிவு

சேரமான் கணைக்கால் இரும்பொறை

சேரமான் கணைக்கால் இரும்பொறை சேர மன்னர்களில் ஒருவர். இவர் சேர மன்னர்களில் இரும்பொறை என்ற மரபினரைச் சேர்ந்தவர். இரும்பொறையினர் தொண்டி என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு சேர நாட்டின் ஒருபகுதியை ஆண்டு வந்தனர். இவர்களில் கணைக்கால் இரும்பொறை என்னும் மன்னன் ஒருவன் சிறப்புற்று விளங்கினான். அவன் அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம் ஆகிய அரசருக்குரிய அருங்குணங்கள் பலவற்றையும் கொண்டிருந்தார். வீரமும், ஈரமும் வாய்ந்தவனாகவும் விளங்கினார். கணைக்கால் இரும்பொறை வேந்தனாக விளங்கியதுடன் செந்தமிழ்க் கவிஞராகவும் திகழ்ந்தார். சங்கப் புலவர்களில் ஒருவராகிய பொய்கையார் என்னும் புலவரிடம் கற்று இனிய தமிழ்ப் பாடல்களை இயற்றும் ஆற்றல் வாய்ந்தவனாகவும் அவன் விளங்கினார்.

சேரமான் கணைக்கால் இரும்பொறை

சேரமான் கணைக்கால் இரும்பொறைக்கும் அக்காலத்தில் சோழ நாட்டை ஆண்ட பெருவேந்தன் கோச்செங்கணானுக்கும் உள்ளூரப் பகைமை இருந்தது. கோச்செங்கணான் ஒப்புயர்வற்ற பெருவீரம் கொண்ட சிறந்த சிவ பக்தர். ‘எண்டோள் ஈசர்க்கு எழில்மாடம் எழுபது செய்து உலகம் ஆண்டவன்’ என்று புகழ் பெற்றவன். தமிழ் மொழியினிடத்தும், தமிழ்ப் புலவர்களிடத்தும் தணியாத வேட்கை கொண்டவர். இவ்விருவர்க்கும் ஏற்பட்ட பகையுணர்ச்சி நாளடைவில் வளர்ந்து பெருகிச் சிறு பொறியே பெருந்தீயானது போலப் பெரும் போராய் மூண்டது. இரு வேந்தரும் தம் பெரும் படைகளுடன் திருப்போர்ப்புறம் என்னும் இடத்தில் சந்தித்தனர். போர் தொடங்கியது. முடிவில் சேரர் படை தோல்வியடைந்தது. செங்கணான் இரும்பொறையைச் சிறைப்படுத்தினார்.


செங்கணான் சிறைப்பட்ட சேர வேந்தனைக் குடவாயிற் கோட்டம் என்னும் இடத்தில் சிறை வைத்தார். மானமே பெரிதென மதிக்கும் மன்னனாகிய இரும்பொறை தனக்கு ஏற்பட்ட அவமானத்தை எண்ணி எண்ணி அகம் வருந்தினார். செங்கோல் ஏந்தும் கையில் சங்கிலியைப் பிணைத்து இழுத்து வரப்பெற்ற தன் இழிவை நினைத்து உள்ளம் குமுறினார். போர்க்களத்திலேயே மாண்டு மடிந்திருந்தால் இந்த அவலநிலை ஏற்பட்டிராதன்றோ என்று ஏங்கினார். தனக்கு நேர்ந்த இந்த அவமானம் தன்னோடொழியாது சேரர் பரம்பரைக்கே பேரவமானமாக நிலைத்து விட்டதே என்று கலங்கினார். இத்தகைய மான உணர்ச்சியால் உணவும் உண்ணாமல் உறங்கவும் செய்யாமல் உள்ளமும் உடலும் சோர்ந்து கிடந்தார்.

கவலையாலும் பசியாலும் வாடிக் கிடந்த கணைக்கால் இரும்பொறைக்குக் களைப்பு மேலிட்டது. கண்கள் இருண்டன. நா உலர்ந்தது. தாங்க முடியாத நீர் வேட்கை உண்டாயிற்று. அதனால் அவன் நிலைகுலைந்து அச்சிறைக் காவலனை நோக்கிச் சிறிது நீர் கொணருமாறு பணித்தார். அச்சிறைக் காவலன் செருக்கு மிக்கவன். உணவுண்ணாமல் வாடிக் கிடக்கும் மன்னன் நிலைகண்டு மனம் பதறாமல் வாளா இருந்தான். நெடுநேரமாகியும் அவன் நீர் கொண்டு வந்து தரவில்லை. சிறைக்காவலன் கூட அவரை அலட்சியமாகக் கருதினான். இதனை நினைத்து நெஞ்சு புழுங்கினார் இரும்பொறை. சேர வேந்தன் இவ்வாறு சிந்தை நொந்து துடிக்கும் போது, வெந்த புண்ணில் வேல் நுழைத்தலைப் போல அச்சிறைக் காவலன் நீண்டநேரம் கழித்து ஒரு பாத்திரத்தில் சிறிது நீரைக் கொண்டு வந்து இடக்கையால் அலட்சியமாக வைத்துச் சென்றான்.

இதைக் கண்ட இரும்பொறையின் கண்கள் சிவந்தன. சினத்தால் அவர் உடல் நடுங்கியது. சிறைப்பட்ட அவன் சினம் யாரை என்ன செய்யும்? என்றாலும் தனக்கு ஏற்பட்ட பேரவமானத்தை அவரால் தாங்கமுடியவில்லை. “ஆ! என்னே என் இழிநிலை! போர்க்களத்தில் வீரப்போர் புரிந்து இறத்தலே எம் போன்ற வேந்தர்க்கு அழகு! அங்ஙனம் இன்றி நோய் முதலியவற்றால் இறந்தாலும் அவர்களும் போர்க்களத்தில் இறந்ததற்கு அறிகுறியாக அவர்கள் உடலை வாளால் பிளந்து அடக்கம் செய்வது மன்னர் குல மரபன்றோ? குழந்தை பிறந்து இறந்தாலும், உருவமற்ற மாமிசப் பிண்டமாகப் பிறந்தாலும் அவற்றையும் வாளால் பிளந்து அடக்கம் செய்வதில் தவற மாட்டார்களே! அத்தகைய மன்னர் பரம்பரையில் என்னைப் போல இழிந்தவன் ஒருவன் பிறக்கலாமோ? போர்க்களத்தில் பகைவன் வாளால் பிளக்கப்படாமல் சிறைப்பட்டேனே! நாயைச் சங்கிலியால் கட்டி இழுத்து வருவது போல இழுத்து வந்து இச்சிறையில் தள்ளித் துன்புறுத்தியும் நான் சாகாமல் வாழ்கிறேனே! உண்ணாமல் உயிர் விடத் துணிந்த நான் இவ்வற்பனிடம் இந்நீரை யாசிக்கக்கூடாது என்ற மனவுறுதியில்லாமல் நீரைக் கேட்டு மானம் இழந்தேனே! இங்ஙனம் மானம் இழந்தும் நான் உயிர் வாழலாமோ?” என்று அனலிடைப்பட்ட புழுவெனத் துடித்தார் இரும்பொறை.

அதனால் சேர மன்னன் சிறைக்காவலன் கொண்டு வந்து வைத்த நீரைப் பருகாமல் உயிர்விடத் துணிந்தார். தன் உள்ளக் குமுறலை அழகிய செந்தமிழ்ப் பாடலாக ஓர் ஓலையில் வடித்து வைத்தார். புறநானூறு குறிப்பிடும் அப்பாடல் பின்வருமாறு:

“குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
ஆளன்று என்று வாளில் தப்பார்
தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்திரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்
மதுகை இன்றி வயிற்றுத் தீத்தணியத்
தாமிரந் துண்ணும் அளவை
ஈன்மரோ இவ்வலகத் தானே”

நெஞ்சம் உருக்கும் இப்பைந்தமிழ்ப் பாடலைப் பாடிய இரும்பொறை, மானம் இழந்து வாழ்ந்தார் என்பதைவிடத் தன் மானத்தைக் காக்க உயிரையே துறந்தார்.

சிறையில் சேர வேந்தன் இறந்தது அறியாத செந்தமிழ்ப் புலவர் பொய்கையார் அவனைச் சிறை விடுவிக்க முயன்றார். சேரனின் அருமை பெருமைகளைச் சோழனுக்கு உணர்த்தி அவர்களிடையே ஒற்றுமையை வளர்க்க அரும்பாடுபட்டார். “களவழி நாற்பது” என்னும் சிறந்த நூல் ஒன்றினை இயற்றிச் செங்கணான் அவையில் அரங்கேற்றினார். அந்நூல் இரும்பொறையுடன் அவர் நடத்திய பெரும்போரில் அப்போர்க்களம் வழங்கிய கோரக் காட்சியைச் சித்திரிப்பதாகும். அதன் உட்பொருளை உணர்ந்த செங்கணான் தன்னால் விளைந்த பேரழிவினை எண்ணித் துன்புற்றார். தனக்கு அறிவுரை அளித்த புலவர் பொய்கையாரைப் பணிந்து, “புலவர் ஏறே! உங்கள் பொருள் மொழியால் நான் உண்மையை உணர்ந்தேன். மனம் தெளிந்தேன். இனிப் போர் புரியேன். எனக்கு தக்க சமயத்தில் இவ்வறிவுரை கூறிய தங்களுக்கு என்ன கைமாறு செய்வேன்?” என்று கூறினார்.

பொய்கையார், “வேந்தர் வேந்தே! உன் தெளிந்த உள்ளத்தைக் கண்டு உவக்கிறேன். நான் வேண்டுவன பொருளும் பொன்னும் போகமும் அல்ல. உன் அருளை வேண்டுகிறேன். இரும்பொறை என் செந்தமிழ் மாணவன். அவனைச் சிறையிலிருந்து விடுவித்து நீங்கள் இருவரும் ஒன்றிவாழ வேண்டும் என்பதே நான் விரும்பும் பரிசில்” என்றார்.

அவ்வுரை கேட்ட செங்கணான், “ஆ! சேரமன்னன் தங்கள் மாணவரா? தமிழறிந்த அவ்வேந்தரைச் சிறைப்படுத்தியது தமிழையே சிறைப்படுத்தியதாகும். வாருங்கள் இப்போதே அவரைச் சிறைவிடுத்து மன்னிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.” என்று கூறிப் புலவருடன் குடவாயிற் கோட்டம் சென்றார். ஆனால் அங்கு அவர்கள் கண்ட காட்சி அவர்களைப் பெரும் துன்பத்தில் ஆழ்த்தியது. இறந்து கிடந்தார் இரும்பொறை. அவர் எழுதி வைத்த பாடல் அவனுடைய மான வீரத்தை விளக்கி நின்றது. போரிலே வென்ற தன்னை இரும்பொறை மானத்திலே வென்று விட்டதறிந்து செங்கணான் கண்ணீர் சொரிந்தார். ஒப்பற்ற தமிழ்ப் புலவனான அவனைக் கொன்ற குற்றம் தன்னோடொழியாது சோழ பரம்பரைக்கே அழியாத களங்கமாய் நிலைத்து விட்டதை எண்ணி நாணினார். தன் பிழையை மன்னிக்குமாறு பொய்கையாரை வேண்டினார்.

பொய்கையார் செங்கணானை நோக்கி, “மானம் இழந்து உயிர்வாழ விரும்பாத இரும்பொறையின் செயல் மன்னர் பரம்பரைக்கே பெருமையளிப்பதாகும். இவன் மரணத்தால் தமிழ் வேந்தர்களாகிய நீங்கள் ஓர் உண்மையை உணர்தல் வேண்டும். இனியேனும் நீங்கள் உங்களுக்குள் பகைமை கொண்டு போர் புரியாமல் ஒற்றுமையோடு வாழ்ந்து தமிழ் நாட்டைப் பெருமைப் படுத்துவீர்களாக,” என்று அறிவுரை கூறித் தேற்றினார்.

மனநிலை மாற்றம்

நம்முடைய சொந்த உளக்காட்சியினைக் கொண்டே நாம் மிக அதிகமாக விடயங்களைப் பார்க்கின்றோம். நம்முடைய எண்ணங்கள் குறிப்பிட்ட விடயங்களில் பொறிக்குள்ளாகியுள்ளது. இவ்வாறான நிலையில் இருந்தால், நம் மனநிலை மாற்றப்பட வேண்டியது அவசியம். மனநிலை என்பது ஒருவருடைய நடத்தையையும் மனோபாவத்தையும் முடிவுசெய்யும் நம்பிக்கைகள் அல்லது சிந்திக்கும் வழி ஆகும். நாம் எப்படி விடயங்களைப் பார்க்கின்றோமோ அப்படியே நம் குணவியல்பும் அமையும். அவ்வாறே நம் சிந்தனையும் நம்பிக்கையும் நம் நடத்தையைத் தீர்மானிக்கும்.

மனநிலை மாற்றம்

முன்னேற்ற உருவாக்கத்தில் ஒரு பெரும் காரணியாக மனநிலையை அகற்றுதல் காணப்படுகிறது. உங்கள் நடத்தையிலும் மனோநிலையிலும் ஒரு நேர் தாக்கத்தை உருவாக்கக்கூடிய புதிய மனநிலையை எடுத்தலும், அதற்கு மாறான மனநிலையை அகற்றலும் முக்கியமானது. நம் எல்லோரிடமும் சில பிழையான குணவியல்புகள் உள்ளன. அவற்றை நாம் கண்டுபிடித்து, நேரான மனநிலைக்கு மாற்றப் போராட வேண்டும்.

மனநிலை பற்றிய ஒரு ஆப்பிரிக்க கதை உள்ளது. பாதணி விற்கும் நிறுவனம் ஒன்று தன் இரு விற்பனை முகவர்களை ஆப்பிரிக்காவிற்கு அனுப்பியது. முதலாவது நபர் "இங்கு யாரும் பாதணி அணிவதில்லை" என தன் கடிதத்தில் குறிப்பிட்டு, தன் வேலையை ராஜினாமா செய்தார். இரண்டாவது நபர் "இங்கு எல்லோருக்கும் பாதணி வேண்டும்" என தன்னுடைய மகிழ்ச்சியையும், வியாபாரத்திற்கு இடமுள்ளதையும் குறிப்பிட்டு தன் நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பினார். இங்குள்ள வேறுபாடு என்னவெனில் இரண்டாவது நபர் "இங்கு எல்லோருக்கும் பாதணி வேண்டும்" என்ற நேர் மனநிலையைக் கொண்டிருந்தார். இதுதான் வேறுபாடு! நேர் மனநிலை நம்பிக்கையைக் கொண்டுவரும். ஒருவர் சாத்தியமற்ற சூழ்நிலையைக் காண, மற்றவர் முடிவற்ற சாத்தியப்பாட்டைக் கண்டார்.

தெளிவாக குறிப்பிடக்கூடியது என்னவென்றால், நம்முடைய மனநிலை நம்முடைய மனோபாவத்திலும், மிகவும் முக்கியமாக நம்முடைய நடத்தையையிலும் தாக்கம் செலுத்தும். நம் சிறப்பிற்காக நடத்தையிலும் முன்னேற்றத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தத் தடைசெய்யும் பிழையான மனநிலையை விலக்குவதும், ஒரு நேர் தாக்கத்தை உருவாக்கக்கூடிய புதிய மனநிலையை பற்றிக் கொள்வதும் மிகவும் அவசியம்.

ஆளுமை

ஆளுமை ஒவ்வொருவருக்கும் உள்ளது. ஆளாளுக்கு அது வேறுபடும். ஆயினும், இனிமையான ஆளுமை நம் வாழ்வில் முன்னேற்றத்திற்கு அவசியம்.

ஆளுமை

நாம் ஆயிரக்கணக்கானோரை நம் வாழ்வில் சந்திக்க வேண்டியிருக்கிறது. அவர்களிடம் நம் தேவையை சதித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆகவே வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால் முக்கியமாக நாம் ஒன்றை கட்டாயம் நினைவுபடுத்த வேண்டும். அது என்னவென்றால்; "எவ்வளவுக்கெவ்வளவு குறைவாக மற்றவரிடமிருந்து வேறுபடுகிறோமோ, எவ்வளவுக்கெவ்வளவு குறைவாகப் பூசலிடுகிறோமோ, உரசுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது. மிகமிகக் குறைவாக இவற்றைச் செய்ய ஆக்க வெற்றியின் விகிதாச்சாரம் அதிகரித்துக் கொண்டே போகும்".

எஃகு மன்னன் என்று புகழ் பெற்ற ஆண்ட்ரூ கார்னீகி தனது வெற்றிக்கான காரணத்தைக் குறிப்பிடும்போது இனிமையான ஆளுமைக்கே முதலிடத்தைக் கொடுக்கிறார். இதை வைத்தே மனிதர்களை நிர்வகிக்கும் முறையை அவர் நன்றாகத் தெரிந்திருந்து வெற்றி பெற்றார். 'மூளைக்குப் பதிலாக இனிமையான ஆளுமையே போதும்' என்ற அவரது கூற்றே அவர் எவ்வளவு முக்கியத்துவத்தை இதற்குத் தந்துள்ளார் என்பதைப் புலப்படுத்தும்.

இனிமையான ஆளுமை உள்ளவர்கள் ஒரு இடத்திற்கு வந்தாலே அந்த இடம் மின்சாரம் வந்தாற்போல ஒளிவெள்ளம் பெறும் மற்றவர்களைத் தன்வயப்படுத்துவதில் இவர்களுக்கு ஈடு இணை இல்லை.

சார்லஸ் டிக்கன்ஸ் ஒரு அறைக்குள் நுழைந்தார் என்றால் கணகணப்பூட்டும் அடுப்பைக் கிளறுவதன் மூலம் குளிரைப் போக்க வரும் இதமான வெப்பம் வருவது போல இருக்கும் என்கிறார் நண்பர் ஒருவர்.

பிரபல கவிஞன் கதே, ஒரு ஹோட்டலுக்குள் நுழைந்தாரென்றால் கையிலுள்ள கத்தி, முள்ளுக்கரண்டி, உணவை அப்படியே வைத்துவிட்டு வைத்த விழி மாறாமல் அவரையே அனைவரும் பார்த்திருப்பார்களாம். அவ்வளவு இனிய ஆளுமை அவருக்கு.

நெப்போலியன் மனைவி ஜோசஃபைனின் ஆளுமைக்கு அடிமை ஆகாதவரே இல்லை. பிரான்ஸ் நாட்டில் மட்டுமல்ல, நெப்போலியன் வென்ற நாடுகளில் உள்ளவர்கள் எல்லாம் கூட ஜோசபைன் வசமானார்கள்! தனது இனிய ஆளுமையின் வெற்றியின் ரகசியத்தை அவளே ஒரு முறை கூறிவிட்டாள். "எனது விருப்பம் என்ற வார்த்தைகள் என் வாயிலிருந்து ஒரே ஒருமுறை தான் வரும், அது எப்போதென்றால் என்னைச் சூழ்ந்துள்ள அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்பதே என்று நான் சொல்லும்போது! அது மனப் பூர்வமாக நான் கூறும் உண்மைதான்!". இனிமையான ஆளுமை உள்ளவர்களைச் சூழ்ந்துள்ளவர்கள் மகிழ்ச்சிப் பரவசத்தில் திளைப்பவர்களே.

இரண்டு முறை அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த தியோடர் ரூஸ்வெல்ட் வெகுஜன கவர்ச்சியாளர், சிறந்த பேச்சாளர், சக்தியும் உற்சாகமும் துள்ளும் மனிதர். அமெரிக்காவையே தன் கவர்ச்சி மூலம் வசப்படுத்தியவர். கவர்ச்சி என்று கூறும்போது புறஅழகை கூறுவதாக எண்ணக்கூடாது.

புற அழகு சிறிது அனைவரையும் கவரவே செய்யும். ஆனால் அக அழகு, உள் அழகு, பலவித நல்ல குணங்களால் விகசித்து மலரும் உள்ளழகு மட்டுமே நிலைத்து நிற்கும் பயனைத் தரும். பொக்கை வாய்க் கிழவரான மகாத்மாவிற்கு உலகமே அடிபணியவில்லையா? உலகிலேயே குள்ளமான படைத் தலைவனான நெப்போலியன் காலில் உலகமே விழவில்லையா?

ஆளுமையின் அடிப்படை

ஆளுமை என்பது பல நல்ல நடத்தைகளைக் கொண்டிருப்பது. நெப்போலியன் ஹில் இவற்றைப் பட்டியலிட்டுத் தருகிறார்.
  • வெகுஜன கவர்ச்சி: மற்றவர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு அவர்கள் ஆசை அபிலாஷையை நிறைவேற்ற முன்வரும் தன்மை.
  • மனோலயம்: தன் மனத்தை வசப்படுத்துபவனே பிறரை வசப்படுத்த முடியும்.
  • திடக்குறிக்கோள்: தனக்கெனக் கொண்டுள்ள குறிக்கோள்.
  • நல்ல உடை: இடத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ற உடை.
  • உடல் அசைவு, இருக்கை பாவனை: நடை, உடை, பாவனையில் ஒரு தனித்துவம்.
  • குரல்: தொனி, கம்பீரம், ஏற்ற இறக்கம், தெளிவான உணர்ச்சி கொண்ட குரல்வளம்.
  • கொள்கையில் தீவிர பற்று: இது இல்லாமல் யாரும் நம்பிக்கை வைக்க மாட்டார்கள்.
  • மொழியை இடம் அறிந்து பயன்படுத்தல்: தகுந்த பொருத்தமான சொற்களை இனிய நடையில் பயன்படுத்துதல்.
  • நிதானம்: தன்னம்பிக்கை, தன்னடக்கம் இவற்றுடன் கூடிய நிதானம்.
  • நகைச்சுவை உணர்வு: முக்கியத் தேவையானை இது இல்லாவிடில் வாழ்க்கை தாழ்ந்து கொண்டே இருக்கும்.
  • சுயநலமின்மை: சுயநலமும் இனிய ஆளுமையும் நேர் எதிரானவை, ஒத்துவராதவை.
  • முகபாவம்: அகத்தின் அழகு முகத்திலே! தெளிவான சிந்தனையைக் குறிக்கும் முகபாவம்.
  • ஆக்கப்பூர்வமான சிந்தனை: நல்லதே நடக்கும் என்னும் ஆக்கப்பூர்வமான சிந்தனை.
  • உற்சாகம்: இது இல்லவிடில் மற்றவரை எப்படி உற்சாகப் படுத்தமுடியும்?
  • நல்ல உடல்நலம்: சுவரை வைத்தே சித்திரம் எழுத வேண்டும். நல்ல உடல்நலமே நினைத்ததை முடிக்க அடிப்படைத் தேவை.
  • கற்பனை வளம்: இனிய ஆளுமைக்கான முக்கிய குணங்களுள் ஒன்று.
  • தந்திரம்: நாசுக்காக பல இடங்களில் நடக்காவிட்டால் வீண் சச்சரவு தோன்றும்.
  • பல்துறை ஞானம்: நாட்டு நடப்புகளை அறிவதோடு, பல துறைகளில் ஆர்வமும், அறிவும், அக்கறையும் கொண்டிருத்தல்.
  • கேட்கும் செவியைக் கொண்டிருப்பது: அனைவர் சொல்வதையும் பொறுமையுடன் கேட்கும் செவி. அதற்கான மனோபக்குவம்.
  • பேச்சுக்கலை: தன் மனதில் உள்ளதை ஆற்றலுடன் சரியாக வெளிப்படுத்தும் பேச்சுத்திறன்.
  • தனிப்பட்ட கவர்ச்சி: கட்டுப்படுத்தப்பட்ட "பாலியல்" சக்தி/கவர்ச்சி. இயல்பாகப் பிறப்புடன் வரும் குணம் இது ஒன்றுதான். மற்ற அனைத்து குணங்களும் பயிற்சி மூலம் பெற்று விடலாம்.