ஆளுமை

ஆளுமை ஒவ்வொருவருக்கும் உள்ளது. ஆளாளுக்கு அது வேறுபடும். ஆயினும், இனிமையான ஆளுமை நம் வாழ்வில் முன்னேற்றத்திற்கு அவசியம்.

ஆளுமை

நாம் ஆயிரக்கணக்கானோரை நம் வாழ்வில் சந்திக்க வேண்டியிருக்கிறது. அவர்களிடம் நம் தேவையை சதித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆகவே வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால் முக்கியமாக நாம் ஒன்றை கட்டாயம் நினைவுபடுத்த வேண்டும். அது என்னவென்றால்; "எவ்வளவுக்கெவ்வளவு குறைவாக மற்றவரிடமிருந்து வேறுபடுகிறோமோ, எவ்வளவுக்கெவ்வளவு குறைவாகப் பூசலிடுகிறோமோ, உரசுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது. மிகமிகக் குறைவாக இவற்றைச் செய்ய ஆக்க வெற்றியின் விகிதாச்சாரம் அதிகரித்துக் கொண்டே போகும்".

எஃகு மன்னன் என்று புகழ் பெற்ற ஆண்ட்ரூ கார்னீகி தனது வெற்றிக்கான காரணத்தைக் குறிப்பிடும்போது இனிமையான ஆளுமைக்கே முதலிடத்தைக் கொடுக்கிறார். இதை வைத்தே மனிதர்களை நிர்வகிக்கும் முறையை அவர் நன்றாகத் தெரிந்திருந்து வெற்றி பெற்றார். 'மூளைக்குப் பதிலாக இனிமையான ஆளுமையே போதும்' என்ற அவரது கூற்றே அவர் எவ்வளவு முக்கியத்துவத்தை இதற்குத் தந்துள்ளார் என்பதைப் புலப்படுத்தும்.

இனிமையான ஆளுமை உள்ளவர்கள் ஒரு இடத்திற்கு வந்தாலே அந்த இடம் மின்சாரம் வந்தாற்போல ஒளிவெள்ளம் பெறும் மற்றவர்களைத் தன்வயப்படுத்துவதில் இவர்களுக்கு ஈடு இணை இல்லை.

சார்லஸ் டிக்கன்ஸ் ஒரு அறைக்குள் நுழைந்தார் என்றால் கணகணப்பூட்டும் அடுப்பைக் கிளறுவதன் மூலம் குளிரைப் போக்க வரும் இதமான வெப்பம் வருவது போல இருக்கும் என்கிறார் நண்பர் ஒருவர்.

பிரபல கவிஞன் கதே, ஒரு ஹோட்டலுக்குள் நுழைந்தாரென்றால் கையிலுள்ள கத்தி, முள்ளுக்கரண்டி, உணவை அப்படியே வைத்துவிட்டு வைத்த விழி மாறாமல் அவரையே அனைவரும் பார்த்திருப்பார்களாம். அவ்வளவு இனிய ஆளுமை அவருக்கு.

நெப்போலியன் மனைவி ஜோசஃபைனின் ஆளுமைக்கு அடிமை ஆகாதவரே இல்லை. பிரான்ஸ் நாட்டில் மட்டுமல்ல, நெப்போலியன் வென்ற நாடுகளில் உள்ளவர்கள் எல்லாம் கூட ஜோசபைன் வசமானார்கள்! தனது இனிய ஆளுமையின் வெற்றியின் ரகசியத்தை அவளே ஒரு முறை கூறிவிட்டாள். "எனது விருப்பம் என்ற வார்த்தைகள் என் வாயிலிருந்து ஒரே ஒருமுறை தான் வரும், அது எப்போதென்றால் என்னைச் சூழ்ந்துள்ள அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்பதே என்று நான் சொல்லும்போது! அது மனப் பூர்வமாக நான் கூறும் உண்மைதான்!". இனிமையான ஆளுமை உள்ளவர்களைச் சூழ்ந்துள்ளவர்கள் மகிழ்ச்சிப் பரவசத்தில் திளைப்பவர்களே.

இரண்டு முறை அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த தியோடர் ரூஸ்வெல்ட் வெகுஜன கவர்ச்சியாளர், சிறந்த பேச்சாளர், சக்தியும் உற்சாகமும் துள்ளும் மனிதர். அமெரிக்காவையே தன் கவர்ச்சி மூலம் வசப்படுத்தியவர். கவர்ச்சி என்று கூறும்போது புறஅழகை கூறுவதாக எண்ணக்கூடாது.

புற அழகு சிறிது அனைவரையும் கவரவே செய்யும். ஆனால் அக அழகு, உள் அழகு, பலவித நல்ல குணங்களால் விகசித்து மலரும் உள்ளழகு மட்டுமே நிலைத்து நிற்கும் பயனைத் தரும். பொக்கை வாய்க் கிழவரான மகாத்மாவிற்கு உலகமே அடிபணியவில்லையா? உலகிலேயே குள்ளமான படைத் தலைவனான நெப்போலியன் காலில் உலகமே விழவில்லையா?

ஆளுமையின் அடிப்படை

ஆளுமை என்பது பல நல்ல நடத்தைகளைக் கொண்டிருப்பது. நெப்போலியன் ஹில் இவற்றைப் பட்டியலிட்டுத் தருகிறார்.
  • வெகுஜன கவர்ச்சி: மற்றவர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு அவர்கள் ஆசை அபிலாஷையை நிறைவேற்ற முன்வரும் தன்மை.
  • மனோலயம்: தன் மனத்தை வசப்படுத்துபவனே பிறரை வசப்படுத்த முடியும்.
  • திடக்குறிக்கோள்: தனக்கெனக் கொண்டுள்ள குறிக்கோள்.
  • நல்ல உடை: இடத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ற உடை.
  • உடல் அசைவு, இருக்கை பாவனை: நடை, உடை, பாவனையில் ஒரு தனித்துவம்.
  • குரல்: தொனி, கம்பீரம், ஏற்ற இறக்கம், தெளிவான உணர்ச்சி கொண்ட குரல்வளம்.
  • கொள்கையில் தீவிர பற்று: இது இல்லாமல் யாரும் நம்பிக்கை வைக்க மாட்டார்கள்.
  • மொழியை இடம் அறிந்து பயன்படுத்தல்: தகுந்த பொருத்தமான சொற்களை இனிய நடையில் பயன்படுத்துதல்.
  • நிதானம்: தன்னம்பிக்கை, தன்னடக்கம் இவற்றுடன் கூடிய நிதானம்.
  • நகைச்சுவை உணர்வு: முக்கியத் தேவையானை இது இல்லாவிடில் வாழ்க்கை தாழ்ந்து கொண்டே இருக்கும்.
  • சுயநலமின்மை: சுயநலமும் இனிய ஆளுமையும் நேர் எதிரானவை, ஒத்துவராதவை.
  • முகபாவம்: அகத்தின் அழகு முகத்திலே! தெளிவான சிந்தனையைக் குறிக்கும் முகபாவம்.
  • ஆக்கப்பூர்வமான சிந்தனை: நல்லதே நடக்கும் என்னும் ஆக்கப்பூர்வமான சிந்தனை.
  • உற்சாகம்: இது இல்லவிடில் மற்றவரை எப்படி உற்சாகப் படுத்தமுடியும்?
  • நல்ல உடல்நலம்: சுவரை வைத்தே சித்திரம் எழுத வேண்டும். நல்ல உடல்நலமே நினைத்ததை முடிக்க அடிப்படைத் தேவை.
  • கற்பனை வளம்: இனிய ஆளுமைக்கான முக்கிய குணங்களுள் ஒன்று.
  • தந்திரம்: நாசுக்காக பல இடங்களில் நடக்காவிட்டால் வீண் சச்சரவு தோன்றும்.
  • பல்துறை ஞானம்: நாட்டு நடப்புகளை அறிவதோடு, பல துறைகளில் ஆர்வமும், அறிவும், அக்கறையும் கொண்டிருத்தல்.
  • கேட்கும் செவியைக் கொண்டிருப்பது: அனைவர் சொல்வதையும் பொறுமையுடன் கேட்கும் செவி. அதற்கான மனோபக்குவம்.
  • பேச்சுக்கலை: தன் மனதில் உள்ளதை ஆற்றலுடன் சரியாக வெளிப்படுத்தும் பேச்சுத்திறன்.
  • தனிப்பட்ட கவர்ச்சி: கட்டுப்படுத்தப்பட்ட "பாலியல்" சக்தி/கவர்ச்சி. இயல்பாகப் பிறப்புடன் வரும் குணம் இது ஒன்றுதான். மற்ற அனைத்து குணங்களும் பயிற்சி மூலம் பெற்று விடலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துக்களை நாகரீகமாக, வெளி இணைப்பு இன்றி பதிவு செய்யலாம். நாகரீகமற்ற, வெளியிணைப்புள்ள கருத்துக்கள் நீக்கப்படும்.