பாப்பரசர் தவற மாட்டாரா?

பாப்பரசரின் தவறா வரம் அல்லது திருத்தந்தையின் தவறா வரம் என்பது பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கிறிஸ்தவர்களின் கத்தோலிக்கப் பிரிவினர் தங்கள் தலைவரான பாப்பரசர் (திருத்தந்தை) தவறு செய்யாத வரத்தைக் கொண்டுள்ளனர் என்ற சமயக் கொள்கையைக் கொண்டுள்ளனர். ஆகவே அவர் எடுக்கும் முடிவுகள் தவறு அற்றவை என்றும், அவற்றை கத்தோலிக்கர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கோட்பாட்டினைக் கொண்டுள்ளனர். பாப்பாண்டவரின் தவறா வரத்தினை ஆங்கிலத்தில் Papal infallibility என அழைக்கலாம்.

பாப்பரசரின் தவறா வரம்

இயேசு எப்போது திருச்சபையின் தலைவராக பேருதுவை நியமித்தாரோ, அன்றிலிருந்து இன்று வரை உள்ள திருச்சபைத் தலைவர்கள் தவறா வரம் கொண்டுள்ளனர் என கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். ஏனென்றால் அவர் பெற்ற வரம் அப்படி என்ற நம்பிக்கையைக் கொண்டுள்ளனர். உண்மையில் பாப்பரசர் தவறா வரம் என்ற ஒன்றைக் கொண்டுள்ளாரா? அன்றிலிருந்து இன்று வரை உள்ள பாப்பரசர்கள் எடுத்த முடிவுகள் தவறவில்லையா?


பாப்பரசரின் இவ்வரம் பற்றி காலத்துக்குக் காலம் விளங்கங்கள் பல அளிக்கப்பட்டுள்ளன. அவையெல்லாம். அவ்வரம் பற்றிய மேலதிக விளக்கங்களாகவும், நியாயப்படுத்தல்களாகவும் அமைந்துள்ளன. ஆனால், 15 ஆம் நூற்றாண்டளவில் அது பற்றிய மறுப்புக் கருத்துக்கள் கத்தோலிக்கருக்கு உள்ளேயும் வெளியேயும் உருவாகத் தொடங்கின. 1989–1992 ஆம் ஆண்டு காலப்பகுதியில், 15 முதல் 25 வயதுள்ளவர்களிடம் (81% கத்தோலிக்கர்கள்) ஐக்கிய அமெரிக்கா உட்பட கிறிஸ்தவர்கள் அதிகமாக உள்ள கிட்டத்தட்ட 11 நாடுகளில் எடுக்கப்பட்ட மதிப்பீட்டின்படி, 36.9% பேர் பாப்பரசர் தவறா வரம் உள்ளவர் என்றும், 36.9% பேர் அதை மறுதலித்தும், 26.2% பேர் அதுபற்றி தங்களுக்குத் தெரியாதென்றும் தெரிவித்தனர்.

இது ஒரு புறமிருக்க, வரலாற்று நிகழ்வில் பாப்பரசர்களால் எடுக்கப்பட்ட முடிவுகள் எவ்வாறு அமைந்தன என நோக்குவது ஏற்புடையது. சிலுவைப் போர்கள் எல்லாம் பாப்பரசர்களின் அனுமதியுடனும் ஆசீர்வாதத்துடனும் நடைபெற்றன. போர்கள் எப்போதும் கண்மூடித்தனமாகவே இருக்கும். அங்கு அப்பாவிகள் கொல்லப்படுவதும், அநியாயங்கள் இடம்பெறுவதும் தவிர்க்க முடியாது. சிலுவைப் போர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. ‘ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டு’ என்ற போதனையில் பிறந்த சமயத்தின் தலைவர்கள் போருக்கு அனுமதியளித்தது தவறில்லையா? இவ்வாறு பல வரலாற்று உதாரணங்கள் பாப்பரசர்கள் தவறு செய்ததை நமக்குக் காட்டுகின்றன. உண்மையில் தவறா வரம் என்பது மக்களின் சிந்தனையில் தாங்கள் சரியானவர்கள் என்னும் கருத்தைத் திணிக்க உருவாக்கப்பட்ட ஒரு இறையியல் போதனை.

குறிப்பு: எதிர்க்கருத்து இருப்பின் நாகரீகமாக, வெளி இணைப்பு இன்றி பதிவு செய்யலாம். நாகரீகமற்ற, வெளியிணைப்புள்ள கருத்துக்கள் நீக்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துக்களை நாகரீகமாக, வெளி இணைப்பு இன்றி பதிவு செய்யலாம். நாகரீகமற்ற, வெளியிணைப்புள்ள கருத்துக்கள் நீக்கப்படும்.