குரான் இறை வேதமா?

குரான் இஸ்லாமியர்களுக்கு இறை வேதமாக உள்ளது. அவர்கள் குரான் இறைவனால் ஜிப்ரயீல் என்ற வானவர் மூலம் முகம்மதுவிற்கு கொஞ்சம் கொஞ்சமாக சொல்லப்பட்டது என நம்புகின்றனர். குரானில் எழுதப்பட்டுள்ளவை நேரடியான கடவுளின் வார்த்தைகள் என இஸ்லாமியர் நம்புகின்றனர். குரான் மிகவும் தூய்மையானது எனவும், அழிவற்றதெனவும், மாற்றமில்லாதது எனவும் அவர்கள் நம்புகின்றனர். இஸ்லாமியர்களின் வாழ்க்கை இதனை ஒட்டியே இருக்க வேண்டும். குரான் சொல்லப்பட்டவாறு வாழாதவன் ஒரு முஸ்லிமாக இருக்க முடியாது. அவன் பெயரளவில்தான் முஸ்லிம் என்று தன்னை சொல்லிக் கொள்ள முடியும். குரான் இல்லாவிட்டால், இஸ்லாம் இல்லை. குரான் இறை வேதமாக இல்லாவிட்டால், இஸ்லாம் என்ற மதமே பொய்.

குரான் இறை வேதமா?

முகம்மதுவினால் தன்னைப் பின்வற்றியவர்களுக்கு குரானை வாய்மொழியாக சொல்லிக் கொடுத்தார். குரானின் தோற்றம் கி.பி. 609–632 காலப்பகுதி ஆகும். குரானில் உள்ள கருத்துக்கள் ஏற்கெனவே கிறிஸ்தவர்களின் விவிலியத்திலும் (பைபிள்), யூதர்களின் டனாக் (Tanakh) அல்லது தோரா (Torah) எனும் யூத சமயத்தினரின் புனித நூலிலும் காணப்படுகின்றது. இதனை குரானின் 3:3 வசனம் உறுதி செய்கிறது. குரான் 3:3 உண்மையைக் கொண்டுள்ள இந்த வேதத்தைப் (படிப்படியாக) அவன் தான் உம் மீது இறக்கி வைத்தான்; இது-இதற்கு முன்னாலுள்ள (வேதங்களை) உறுதிப்படுத்தும் தவ்ராத்தையும் இன்ஜீலையும் அவனே இறக்கி வைத்தான் எனக் குறிப்பிடுகிறது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தவ்ராத் என்பது தோராவையும் (Torah) இன்ஜீல் என்பது கிறிஸ்தவ விவிலியதின் புதிய ஏற்பாட்டை (New Ttestament) அல்லது நற்செய்திகளைக் (Gospel) குறிப்பிடுகிறது. ஆகவே இந்த வசனத்தின்படி கடவுளே (அல்லாஹ்) யூதர்களினதும் கிறிஸ்தவர்களினதும் புனித நூல்களைக் கொடுத்தார் என்றாகின்றதல்லவா? ஆகவே கடவுள் கொடுத்த அந்தப் புனித நூல்களையும் இஸ்லாமியர்கள் ஏற்றுக் கொண்டு, அதன்படி நடக்க வேண்டும் அல்லவா? கடவுளின் கட்டளையை ஏன் மீறுகிறார்கள். கடவுள் சொன்னாலும், தாங்கள் அந்த சமய நூல்களை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்ற அறியாமையில் உள்ளார்களா?

யூதர்களினதும் கிறிஸ்தவர்களினதும் புனித நூல்களை இறைவேதமாக ஏற்றுக் கொள்ளாததற்கு இரு காரணங்களை முஸ்லிம்கள் முன்வைக்கின்றனர்.
  • காலாவதியாகிவிட்ட நூல்கள் - அந்த இரண்டு நூல்களும் வெவ்வேறு காலங்களில் கொடுக்கப்பட்டவை. எக்காலத்திற்கும் ஏற்புடையது குரான் மட்டுமே. எனவே அதனை மட்டும் ஏற்றுக் கொண்டால் போதுமானது.
  • திரிபுபடுத்தப்பட்ட நூல்கள் - யூதர்களும் கிறிஸ்தவர்களும் அவ்விரு நூல்களிலும் தங்களுக்கேற்றவாறு மாற்றி எழுதிக் கொண்டார்கள். திரிபுபடுத்தமாமல் எழுதப்பட்டது குரான் மட்டுமே.

யூதர்களின் வேதம் மோசேக்கு (மூஸா) கொடுக்கப்பட்டதாக குறிப்பிடும் காலம் சுமார் கி.மு. 1391–1271 இருக்கலாம் என நம்பப்படுகிறது. இது சுமார் கி.மு. 600-400 காலப்பகுதியில் எழுத்து வடிவம் பெற்றது. பின்னர், கிறிஸ்தவர்களின் விவிலியம் சுமார் கி.பி. 33-120 ஆண்டளவில் உருவாகியது. பின்னர் குரான் கி.பி. 609–632 காலப்பகுதியில் உருவாக்கம் பெற்றது. இந்த அடிப்படையில் முதல் இரண்டிற்கும் இடையிலான காலம் சுமார் 1500 ஆண்டுகள். கடைசி இரண்டிற்கும் இடையிலான காலம் சுமார் 500 ஆண்டுகள். குரானின் பின் தற்போதுள்ள காலம் சுமார் 1400 ஆண்டுகள். 21 ஆம் நூற்றாண்டு வளர்ச்சியானது 6 ஆம், 7 ஆம் நூற்றாண்டைவிட துரிதமானது. ஆகவே, குரான் காலாவதியாகிவிட்டது எனக் கொள்ளலாமா? குரான் காலாவதியாகவில்லை என்பதை எந்த அடிப்படையில் குறிப்பிடலாம்?

யூதர்களும் கிறிஸ்தவர்களும் வேதங்களை  தங்களுக்கேற்றவாறு மாற்றி எழுதிக் கொண்டார்கள் எனில், மாற்றப்படாத முன்னைய வேதங்கள் எவை? அவை எங்குள்ளன? புதிய மதத்திற்காக முன்னைய வேதங்களின் திரிபுபடுத்தல் குரான் எனவும் கருதலாம் அல்லவா? இஸ்லாமியர்கள் யூதர்களினதும் கிறிஸ்தவர்களினதும் புனித நூல்களை நகல் செய்து, அவற்றைத் திரிபுபடுத்தி குரானை உருவாக்கினர் என்பதற்கும் இடம் உள்ளதல்லவா? இல்லை என்பீர்களானால் அதற்கான ஆதாரம் என்ன? இதனை இறைவன்தான் கொடுத்தார் என்பதற்கு என்ன ஆதாரம்? இவ்வாறுதானே ஒவ்வொரு மதத்தினரும் தங்கள் நூல்களை இறைவன் கொடுத்தார் எனக் கூறுகிறார்கள். இதற்கு இஸ்லாமியர் எப்படி விதிவிலக்காவர்? இது மற்றவர்களுக்கு விளங்காது, அவர்களுக்கு மறைக்கப்பட்டுள்ளது என்று கதை சொல்வது முறையல்ல. ஒவ்வொரு சமயத்தினரும் தங்களுக்கென கதைகளை உருவாக்கி, மற்றவர்கள் அதை நம்ப வைத்திருக்கிறார்கள். இதற்கு இஸ்லாமும் விதிவிலக்கல்ல. இறைவன்தான் குரானை வழங்கினார் என்பதை ஆதாரப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், குரானும் மற்ற சமய நூல்களில் ஒன்றே. அது இறை வேதம் அல்ல!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துக்களை நாகரீகமாக, வெளி இணைப்பு இன்றி பதிவு செய்யலாம். நாகரீகமற்ற, வெளியிணைப்புள்ள கருத்துக்கள் நீக்கப்படும்.