தொலைக்காட்சி பார்ப்பதை நிறுத்து, நல்லது நடக்கும்

நான் தொலைக்காட்சி பார்ப்பதை நிறுத்தி மூன்று வருடங்களாகி விட்டது. பத்து பதினைந்து வருடங்களாக படித்து வந்த ஜூனியர் விகடன், ஆனந்த விகடன், தினமலர், தினகரன்  மற்றும் குமுதம் படிப்பதையும் நிறுத்தி விட்டேன்.

இது ஏதோ தற்சயலாக நடந்தது போலத்தான். அனால் இவை எல்லாவற்றையும் நிறுத்திய பின் நம் இந்திய நாடு திடீரென அமைதி பூங்காவாக திகழ்கிறது.

tv

எதிர்மறை எண்ணங்கள் மறைந்தே விட்டன.

"நல்லநேரம்" நிறைய கிடைக்கிறது.

பிடித்த வரலாற்று சுயமுன்னேற்ற மற்றும் ஆன்மீக புத்தகங்களை தேடி படிக்க முடிகிறது.

தேவைப்பட்ட தகவல்கள் மற்றும் நல்ல பல விடயங்களை கூகுள் செய்து படித்து, பார்த்து ரசிக்க முடிகிறது.

தொலைக்காட்சி ஒரு “முட்டள் பெட்டி” என்று சொன்ன மகானைத்தேடிக் கொண்டு இருக்கிறேன், அவருக்கு மாலை போடுவதற்கு.

தொலைக்காட்சி நிறுவனங்கள்தான்,  நீங்கள் என்ன நினைக்கவேண்டும்? என்ன பார்க்க வேண்டும்?  என்பதை முடிவு செய்கிறது. நம் அறிவையும், மெல்லிய உணர்வுகளையும் வசியப்படுத்தி, வக்கிரமான உணர்ச்சிகளை நம் மூளையில் நிரப்பி விட்டன. அவைகள் வியாபார நிறுவனங்களே ஆகும். விளம்பர இடைவேளை என்பது வெளியில் தெரியும் விளம்பரங்கள் மட்டுமே.

செய்தி என்ற போர்வையில் தனக்கு வேண்டப்பட்ட செய்திகளுக்கு மட்டும் மறைமுகமாக ஆதரவு கொடுக்கும் ஊடகங்கள் இந்தியாவில், தமிழகத்தில், இலங்கையில் அதிகரித்து விட்டன.

எல்லாமே இன்று மாபியா வியாபாரந்தான். நமக்கு புரிய சில வருடங்கள் ஆகும். அவ்வளவு தான்.

தொலைக்காட்சிகள் மற்றும் செய்தித்தாள்கள், இதழ்கள் எதுவும் அதை வெளிப்படுத்துவது இல்லை. 

எதற்குமே உதவாத விவாத மேடையை நடத்தி கொண்டு, சூழ்ச்சி அரசியலை துணிந்து நடத்திக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளுக்கு விளம்பர இடைவேளை கொடுத்து கொண்டு இருக்கிறது.

பரபரப்பு பேட்டி எடுத்துவிட்டு, பணமுடிப்பு கொடுத்து அனுப்பும் தொலைக்காட்சிகள் முட்டாள்களா? பார்க்கும் நாம் முட்டாள்களா?

இதில் சில கட்சிகளுக்கு ஒரே மாநிலத்தில் ஐந்தாறு தொலைக்காட்சி ஒலிபரப்புக்கள் வேறு. கலாசார சீர்கேடான, அரை வேக்காட்டு தொலைக்காட்சி தொடர்களை இந்தியர்கள் அனைவரும் இன்னும் முட்டாள்கள் என்றே நினைத்து வருவது வெட்க கேடு.

தமிழகத்தை எடுத்துக் கொண்டால் தமிழன் தன்பெருமைகளை அடியோடு மறந்து வருகிறான். நம் திருக்குறள் உலகங்கும் செல்லும். ஆனால் நாம் இங்கு கிரிக்கெட், பிக்பாஸ், தொலைக்காட்சி தொடர் என்று மூழ்கிக் கிடக்கிறோம். 

இன்றைய தமிழ்நாடு உண்மையான தமிழ்நாடா? 

அறுபது ஆண்டுகளுக்கு முன்னிருந்த தமிழ்மொழி உணர்வு எப்படி மங்கியது? 

நூல்களைப் படித்தால், தொலைக்காட்சிகள் தொடர்களைப் பார்க்க மனம் ஒப்பாது.

ஊடகங்களிடம் போட்டி மனப்பான்மை வேறு. வியாபார போட்டி. இன்று ஆழ்குழாய் குழியில் விழும் குழந்தைகளை மீட்கும் பணிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய போட்டி போடும் ஊடகங்கள், அந்த குழந்தை இறந்த பின், அது போல் தமிழ்நாடு எங்கும் இருக்கும் ஆழ்குழாய் குழிகளை தேடி மூட எந்த வித முயற்சியும் தொலைக்காட்சி நிலையங்கள் மூலம் செய்ய முயல்வதில்லை. பரபரப்பு ஒன்றே போதுமானது. ஊடக மேதாவிகளுக்கு என்றுமே இறந்தால் தான் நற்செய்தி. சாவும்கூட சாதிக்குச் சாதி வித்தியாசப்படுத்தப்படுகிறது.

உணர்வுபூர்வமாக செய்திகள் அதிகம் பார்த்துப்பார்த்து மனித மனம் இன்று பரபர என்று தான் அலைந்து கொண்டிருக்கிறது. இதுவும் ஒரு மனநோய் தான். ஒரு வித பயத்தையும் உருவாக்குகிறது.

நீங்கள் உண்ணும் உணவு என்னவோ அதை போல் தான் உங்கள் நடத்தை, குணம் எல்லாம்  அமையும் என்பதை போல் நீங்கள் பார்க்கும் வக்கிர தொலைக்காட்சி செய்திகள் உங்கள் குணத்தை ஒரு நாள் கெடுக்கவும் செய்யும்.

பொறுப்பு கேட்ட ஊடகம் தான் இன்று நம்மை ஆள்கிறது. தயவுசெய்து அதை தவிருங்கள். வாழ்க்கை இனிப்பாகும். அமைதி ஆகும். சொந்தமாக சிந்திப்பீர்கள்.

எல்லாவற்றையும் மிகைப்படுத்தி செய்து காட்டும் மன நிலை ஊடக நபர்களுக்கு கை வந்த கலை. அவர்கள் பெண்களை என்றுமே ஒரு போக பொருளாகத்தான் காட்டி வருகிறார்கள். சில செய்தி பத்திரிக்கைகளில் வன்கலவிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் நாட்டில் நடக்கும் நல்ல விடயங்களுக்கு கொடுக்கப்படுவதில்லை.

அடுத்த பிரச்சினையை பிரபலமாக ஆக்க, சில பைத்தியங்கள் வேறு. மேடையில் ஏதோதோ உளறி கொட்ட வேண்டியது. அது உடனே உணர்புபூர்வமான செய்தியாக ஆக்கிவிடுகிறார்கள். முப்பது ஆண்டுகளாக அவர் அரசியலுக்கு வருவாரா? என்ற எதிர்பார்ப்பை குறைந்து போகாமல் பார்த்து கொள்கிறது தொலைக்காட்சிகள்.

முடிந்தால் உங்கள் வீட்டு தொலைக்காட்சி பெட்டிகளை மார்வாடி கடையில் அடமானம் வைத்தோ அல்லது விற்றோ வீட்டுக்கு வீடு நூலகம் அமையுங்கள். தினமும் ஒரு மணி நேரமாவது நல்ல புத்தகங்களை தேடிப்  படியுங்கள்.

முக்கிய செய்திகளை தரமான வானொலியிலோ அல்லது இணைத்திலோ தேவையான அளவு அறிந்து கொள்ளுங்கள். அது நமக்குப் போதுமானது.

இன்னும் நிறைய நேரம் இருந்தால், அநாதை குழந்தைகளுக்கு உதவுங்கள். கற்றுக்கொடுங்கள். உணவு கொடுங்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துக்களை நாகரீகமாக, வெளி இணைப்பு இன்றி பதிவு செய்யலாம். நாகரீகமற்ற, வெளியிணைப்புள்ள கருத்துக்கள் நீக்கப்படும்.