ஐஸ் எனும் கொடிய போதைப்பொருள்

இளைஞர்களை தற்போது கெடுப்பது  ஐஸ் எனும் போதைப்பொருள். methamphetamine எனப்படும் இப்போதைப்பொருள், மாணவர்கள் முதல் உத்தியோகத்தர்கள் வரை தனது கால்களை அகல ஊன்றியிருக்கிறது. இரண்டாம் உலக போரில் யுத்த வீரர்களை களைப்பின்றி போராட, இது ஒரு ஆயுதமாக ஜப்பானால் பயன்படுத்தப்பட்டது. ஹெரோயின், கஞ்சா போன்றல்லாது, 100% இரசாயனமான இது. மற்றைய வகை போதைப்பொருள்களை விட அதிக நச்சுத்தன்மை உடையதோடு நீண்ட நாட்களுக்கு உடலில் தங்கக்கூடியது.

ice

யாரைக்கேட்டாலும், “என்டமகன்அப்படியெல்லாம் செய்யமாட்டான்” என்ற குருட்டு நம்பிக்கையே இதன் பரவலுக்கு முக்கிய காரணமாகும். அதற்காக சந்தேகப்படுங்கள் என்பதல்ல அர்த்தம். அவரை அறியாமலேயே இது நண்பர்கள் மூலம் அவரை ஆட்கொண்டுவிடும். எனவே தனது பிள்ளைகளின், கணவரின், உறவினர்களின்  உடலில், நடவடிக்கைகலில் ஏற்படும் மாற்றங்களில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

இலங்கையில் ஒரு வருடத்துக்கு 3000 கிலோ ஐஸ் விற்பனையாகிறது, ஆனால் ஹெரோயின் 750 கிலோ மட்டுமே. ஹெரோயின், கொக்கெயின்  போன்றன விலை உயர்வு ஆதலால், கோரெக்ஸ், கஞ்சா, அபின் போன்றவை மட்டும் சிறியளவில் முன்பு பயன்படுத்தப்பட்டன. ஆனால் இன்று ஐஸ் இன் சாதாரண விலை காரணமாக இது ஒரு “தொருப் போதை” ஆக மாறியுள்ளது. விரும்பிய தொகைக்கு, விரும்பிய அளவில் இலங்கையின் எப்பாகத்திலும் பெறலாம். மேட்டுக்குடியினர் மத்தியில் இது ஒரு நகரீகமாக தற்போது மாறியுள்ளது. இது ஒரு குறுகிய நேர மாய இன்பத்தை, புத்துணர்ச்சியை அளிக்கிறது.

ஐஸ் வடிவங்கள்:  வெள்ளை அல்லது பளுப்பு நிறத்தில் தூளாகவோ, குளிசை, ஊசி வடிவிலோ காணப்படலாம் (நொறுங்கிய கண்ணாடித்தூள் போன்று காணப்படும்). இலங்கையில் தூளே பிரபலம்.

பாவனைமுறை: மூக்கால் உறிஞ்சுதல், விழுங்குதல்(குளிசை), ஊசிமூலம் ஏற்றல், புகைத்தல்.

சுவை: கொஞ்சம் கசப்புச்சுவை 

எவ்வாறு கண்டுபிடிப்பது?

பாவனையாளரின் மன, உடல்நிலை பின்வருமாறு.

பாவித்த உடனே: தாகம், சோர்வு, பசி, தூக்கம் எதுவும் வராது. அதீத சக்தி கிடைத்ததுபோல் உணர்வார். அதிகமாக பேசுவார், ஓர் நம்பிக்கை உணர்வு காணப்படும், எதையும் கச்சிதமாக, விரைவாக செய்வார்.

பாவித்து சில மணி நேரத்தின் பின்: இதற்கு எதிர்மாறாக தூக்கம், பசி, சோர்வு அதிகமாக ஏற்படும். அசாதாரண பதற்றம், கோபம், அதிக வியர்வை, தூங்க முடியாமை, தலைவலி என்பன காணப்படுவதோடு, நீண்ட கால விளைவுகளாக  தனிமையை விரும்பல், எல்லாவற்றையும் சந்தேகப்படல், இரவில் சரியாக சுவாசிக்க முடியாமை, பற்கள் அழுகிக்கொண்டு செல்லல் (meth mouth), சடுதியான உடல் நிறைக்குறைவு, குழப்பம், இருட்டில் இருக்க விரும்புதல், யாருடனும் பேச விருப்பமின்மை, வாழ்க்கை மீது பிடிப்பின்மை போன்றவை ஏற்படும்.

இவ்வாறானவற்றை நீங்கள் உங்கள் அன்பானவரிடம் அவதானித்தால், சற்று விழிப்பாயிருங்கள். 

இதன் இறுதி ஆபத்தான நிலைதான் “நானும் எனது ஐசும்” எனும் நிலை. இந்நிலையில் அவருக்கு உறவுகள், குடும்பம் எதுவுமே தேவைப்படாது, எதையாவது விற்று/இழந்தாவது ஐஸ் மட்டும் அவரோடிருந்தால் போதும் எனும் தனிமை நிலை. இந்த நிலையை Meth psychosis என அழைப்பர். இந்நிலையில் அதிக சந்தேகம், விரக்தி ஏற்படும், நிறையப்பேர் தற்கொலை கூட செய்வதுண்டு. அங்கோட மனநல மருத்துவமனையில் இதற்கென விசேடமாக ஐஸ் பகுதி என்று ஒரு பகுதி உண்டு.

பாவனையாளரின் அறையில் காணப்படும் சந்தேகத்துக்குரிய பொருட்கள்

Tungsten மின்குமிழின் குமிழ், தலை கழற்றப்பட்ட லைட்டர், சுருட்டிய பண நோட்டு, சுருட்டிய கடதாசி, கச்சான்தகடு அல்லது அலுமினிய பேப்பர், பேனையின் குழல் போன்றவை உங்கள் உறவினரின் அறைக்குள், சட்டைப்பையினுள் இருந்தால், சற்று கவனமாகுங்கள்.

எவ்வாறு உறுதிப்படுத்துவது: ஒரு வைத்திய பரிசோதனை மூலம் ஐஸ் பாவித்திருக்கிறாரா என்பதை உறுதிப்படுத்தலாம்.

எனவே, உங்கள் இளைஞர்கள் மீது வீட்டில் விழிப்பாயிருங்கள். இக்கொடூர சமூக விசத்திலிருந்து இளைஞர் சமுதாயத்தை வருமுன் பாதுகாப்பதோடு,  பாதிக்கப்பட்டவர்களை நல்வழிப்படுத்தி மீட்டெடுப்போம், விநியோகஸ்தர்கள் பற்றிய விபரங்களை உரிய அதிகாரிகளிடம் தொரிவிப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துக்களை நாகரீகமாக, வெளி இணைப்பு இன்றி பதிவு செய்யலாம். நாகரீகமற்ற, வெளியிணைப்புள்ள கருத்துக்கள் நீக்கப்படும்.