மானம்

மானம் மிக முக்கியமான பண்புகளில் ஒன்று. மானமே வாழ்வின் உயிர் நிலையெனக் கொண்டு வாழ்ந்தவர் தமிழர். மானமானது தன் நிலையில் தாழாமையும் தாழ்வு வந்தபோது உயிர் வாழாமையும் ஆகும். ஒவ்வொருவர்க்கும் சிற்சில தகுதிகள், கடமைகள் உள்ளன. அவை அவர் பிறந்த குடிப்பிறப்பால், மேற்கொண்ட பொறுப்புகளால் கற்ற கல்வியால் ஏற்பட்ட தகுதிகளாகும். எத்தகைய துன்பம் ஏற்பட்ட போதும் அத்தகுதியிலிருந்து தாழ்தல் கூடாது. உயிரினும் மானம் சிறந்தது. மானம் இழந்தால் உயிர் வாழலாம்; அன்றி உயிர் இழந்தால் மானத்தைக் காக்கலாம் என்ற நிலைமை ஏற்பட்டபோது உயிரைக் கொடுத்தேனும் மானத்தைக் காக்க வேண்டும். ‘மானம் அழிந்தபின் வாழாமை முன் இனிதே’ என்பது தமிழ்நெறி.

மானம்

திருக்குறள்: வள்ளுவர் கூறிய மானம்

மானத்தின் பெருமையை வள்ளுவர் சிறந்த முறையில் எடுத்து விளக்கியுள்ளார். பெற்ற தாயும் உற்ற மனைவியும் அன்புக் குழந்தைகளும் பசியால் துடிக்கும்போது எத்தகைய இழி செயல் புரிந்தேனும் அவர்களைக் காக்கலாம் என்று அறநூல்கள் கூறும். ஆனால் தமிழ்ப் பண்பாட்டு முறையில் அறத்தை வலியுறுத்திய வள்ளுவப் பெருந்தகையாரோ,

“ஈன்றாள் பசிகாண் பானாயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை.”

“இன்றி யமையாச் சிறப்பின வாயினும்
குன்ற வருப விடல்”


என எந்த நிலையிலும் பழிச் செயல் புரிய முற்படலாகாது என்று வற்புறுத்துவதன் வாயிலாக மானத்தின் உயர்வை அறிவுறுத்தியுள்ளார். ‘பெற்ற தாய் பசியால் துடிக்கக் கண்டாலும் சான்றோர் பழிக்கும் மானம் இழந்த செயலைச் செய்து அவளை வாழ வைக்க முற்படலாகாது’ என்றும், ‘ஒரு செயல் எவ்வளவு இன்றியமையாதது ஆயினும் அதனைச் செய்தால் தன்னுடைய மானத்தை இழக்கும் நிலை ஏற்படுமானால் அதனைச் செய்யா தொழிக’ என்றும் வள்ளுவர் பணித்துள்ளார்.

மான வீரம்

இங்ஙனம் பழிச் செயல் புரியாமல் மானம் காக்கும் நெறியில் மற்றையவரினும மேம்பட்டு நிற்கும் நிலையே மான வீரமாகும். கவரிமான் என்பது ஒரு வகை மான். அது தன் உடலிலிருந்து ஒரு மயிர் உதிரப் பெற்றாலும் அதனைப் பொறாது உயிர் விடுமாம். ஆகவே வள்ளுவர் மான வீரத்துக்கு அதனை உவமையாக எடுத்துக் கொண்டார்.

“மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர் நீப்பர் மானம்வரின்”

என்பது அவர் வாக்கு. மானத்தை இழக்கக்கூடிய நிலை ஏற்படும் போது மானமே பெரிதென மதிப்பவர் தம் உயிரைப் பொருட்படுத்த மாட்டார். ‘ஆறிலும் சாவு நூறிலும் சாவு’ என்பது பழமொழி. ஆனால் மானமோ என்றும் அழியாதது. அழியக்கூடிய வாழ்வை விரும்பி என்றும் அழியாத மானத்தைத் துறக்க முற்படாதவரே சான்றோராவர். இத்தகைய மான வீரம் வாய்ந்தவர்களில் சிறப்பாக மதிக்கத்தக்கவன் சேரமான் கணைக்கால் இரும்பொறை என்ற மன்னனாவான். அவனுடைய மான வீரத்தை இங்கு காண்போம்.

குறிப்பு: மின்னஞ்சல் குழுவின் மூலம் பெறப்பட்ட இவ்வாக்கம், இதன் சிறப்புக் கருதி மீள் பதிப்பிடப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துக்களை நாகரீகமாக, வெளி இணைப்பு இன்றி பதிவு செய்யலாம். நாகரீகமற்ற, வெளியிணைப்புள்ள கருத்துக்கள் நீக்கப்படும்.