எது கலாச்சாரச் சீரழிவு?

கலாச்சாரச் சீரழிவு, பண்பாடு அழிவு, மேலைத்தேய மோகம், மேலைத்தேய வாழ்க்கை முறைச் சீர்கேடு, வெளிநாட்டு நாகழீக மோகம் போன்றவற்றைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? முகநூலில் பகிரப்பட்டிருந்த ஒரு படத்தைப் பார்த்ததும் ஒரு கணம் சிந்திக்க வைத்தது. அந்தப்படத்தை நீங்களும் காணுங்கள்.

கலாச்சாரச் சீரழிவு
கலாச்சாரச் சீரழிவு

வெளிநாட்டவர் இருவர் (நம்மூர் ஆட்களாகவும் இருக்கலாம்) பொது இடத்தில் வைத்து முத்தமிடுகின்றனர். அதே பொது இடத்தில் வைத்து நம்மூர் ஆள் சிறுநீர் கழிக்கையில் அந்த வழியால் பெண் ஒருவர் சங்கடத்துடன் செல்கிறார். சிறுநீர் கழிக்கும் நபர் "வெட்கமே இல்லாமல் இந்த வெள்ளைக்காரன் பொது இடத்தில் வைத்து முத்தமிடுகிறான்" என தன் மனதுக்குள் திட்டிக் கொண்டிருக்கிறார். இது அவருக்கு மேலைத்தேய கலாச்சாரச் சீரழிவாகத் தெரியலாம்.


இதில் எது உங்களுக்கு கலாச்சார சீர்கேடாகத் தெரிகிறது? முத்தமிடுபவரா? சிறுநீர் கழிப்பவரா? முத்தமிடுபவர் என்றால் நீங்கள் கட்டாயம் பகுத்தறிவில் வளர வேண்டியவர். வீதி ஓரங்களில், தெரு முனைகளில் மற்றும் பொது இடங்களில் சிறுநீர் கழிக்கும் ஆண்கள் இருக்கும் வரை நம்முடைய கலாச்சாரம், பண்பாடு போன்றன சீர்கெட்டுத்தான் உள்ளது. அவர்கள் அவ்வழியால் செல்லும் பெண்கள், பெரியவர், சிறுவர் போன்ற பலதரப்பட்டவர்களின் மனநிலை பற்றிய யோசித்திருப்பார்களா? ஏன் சக ஆண்களில் பலருக்கு இது சங்கடமானது என்பதை அறிவீர்களா?

வெளிநாட்டவர் கலாச்சாரம், பண்பாடு போன்றன சரியானது என்றோ, மேலைத்தேய கலாச்சாரம் சிறப்பானது என்றோ கருதவில்லை. ஆனால், பிழைகளை நாம் வைத்துக் கொண்டு மற்றவரை விமர்சிப்பது, ஏளனம் செய்வதும் தவறானது. இதனால், நாம் வளரப் போவதில்லை. “இறால் தன் தலைக்குள் ஊத்தையை வைத்துக் கொண்டு, மற்றவரில் ஊத்தை உள்ளது” என்று சொல்லுமாம் என்ற நாட்டார் பழமொழி உள்ளது. இவ்வாறுதான் நாமும் இருந்தால் கலாச்சாரச் சீரழிவு செய்வது வேறு யாருமல்ல. நீங்கள்தான்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துக்களை நாகரீகமாக, வெளி இணைப்பு இன்றி பதிவு செய்யலாம். நாகரீகமற்ற, வெளியிணைப்புள்ள கருத்துக்கள் நீக்கப்படும்.