மெய்ப்பொருள் காண்பதே அறிவு |
கிறிஸ்தவம்:
கடவள் ஒருவரே, ஒரே மதப் புத்தகம் (விவிலியம் ), உலகெங்கும் ஒரே மதம் (கிறிஸ்துவம்).
ஆனால், கத்தோலிக்க பிரிவைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் "சிரியன் கிறிஸ்தவ" பிரிவு தேவாலயம் செல்வதில்லை.
அவ்வாறே மற்றவர்கள் " பெந்தகொஸ்தே" திருச்சபைக்குள் நுழைவதில்லை.
பிற கிறிஸ்தவ பிரிவினர் "இரட்சணிய சேனை" தேவாலயத்துக்குள் செல்வதில்லை.
இவ்வாறு ஒரு பிரிவினர் மற்றய பிரிவினர் தேவாலயம் செல்வதில்லை.
சுமார் 100 இற்கு மேற்பட்ட பிரிவுகள் கிறிஸ்தவ மதத்தில் காணப்படுகின்றன.
ஆனால், கடவள் ஒருவரே, ஒரே மதப் புத்தகம், உலகெங்கும் ஒரே மதம் எனக் கூறிக் கொள்வர்.
இஸ்லாம்:
"அல்லாஹ்" ஒருவனே கடவுள், ஒரே மதப் புத்தகம் (குர் ஆன்), ஒரே இறுதி இறைத்தூதர் நபிகள் நாயகம்.
ஆனால், இந்த ஒரு மதத்திற்குள்ளே "ஷியா " மற்றும் "சுன்னி " பிரிவினர் ஒருவரையொருவர் தாக்குவதும், கொல்வதும் அனைத்து சாதாரணம்.
"ஷியா" பிரிவு முஸ்லீம்கள் "சுன்னி " பிரிவு முஸ்லீம்களின் மசூதிக்குள் நுழைவதில்லை.
இவ்வாறு, "அஹமதியா", "சூபி", "முஜாஹைதீன் " என பிரதான, துணை பிரிவுகள் என பல பிரிவுகள் இஸ்லாம் மதத்தில் உண்டு.
அமெரிக்கா ஈராக்கை தாக்க ஈராக்கை சுற்றியுள்ள இஸ்லாமிய நாடுகள் அமெரிக்காவுக்கு தங்கள் ஆதரவை அளித்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறே ஈரானுக்கு எதிராக பல சவுதி அரேபியா உட்பட்ட பல இஸ்லாமிய நாடுகள் உள்ளன.
ஆனால், கடவுள் ஒருவரே, ஒரே மதப் புத்தகம், ஒரே இறுதி இறைத்தூதர் நபிகள் நாயகம் முகம்மது எனக் கூறிக் கொள்வர்.
இந்து மதம்:
இந்து மதத்தில் சுமார் 1280 மதப் புத்தகங்கள், 10000 துணை நூல்கள், ஒரு லட்சத்துக்கும் அதிகமான தெளிவுரை நூல்கள், எண்ணிக்கையில் அடங்காத தெய்வங்கள், பல்வேறு விதமான ஆச்சாரியார்கள், ஆயிரக் கணக்கான ரிஷிகள், நூற்றுக்கணக்கான மொழிகள்.
ஆனாலும், எவரும் எந்த ஆலயத்தித்குள்ளும் செல்லலாம், தங்கள் விருப்பப்படி வழிபாடு செய்யலாம், தாங்கள் விரும்பிய தெய்வங்களை வணங்கலாம்.
ஓர் இனத்தவரின் வழிபாடுகளில் மற்றவர் கலந்து கொள்ளலாம். தங்கள் மனதில் நினைத்ததை வேண்டிக் கொள்ளலாம். இறைவனுக்கு படைக்கப்பட்டதை வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கலாம்.
கிட்டத்தட்ட பத்தாயிரம் ஆண்டுகளாக மதத்திற்குள் சண்டைகள் இல்லாமல், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, அமைதியையும், அன்பையும் மட்டுமே அனைவருக்கும் போதிக்கும் ஒரே மதம் "இந்து" மதமே.
உண்மை நிலை
இதனை பல இந்துக்கள் முகநூலில் பகிர்ந்தும், விருப்பம் தெரிவித்தும், புகழ்பாடியும் இருந்தனர். இவர்கள் அணைவரும் இந்து சமயம் பற்றி அறியாத இந்துக்கள்.
இந்து சமயம் என்பது பல சமயப் பிரிவுகளின் தொகுப்பு ஆகும். பொதுவாக சைவ, வைணவ, சமண மதங்களின் சண்டை, மற்ற உள் மதச் சண்டைகளுக்கு சளைத்தவை அல்ல. எந்த சைவ சமயத்தவனும் விஷ்ணுவை முதற் கடவுளாகக் கொள்வானா? எந்த வைணவனும் விஷ்ணுவைவிட சிவன் மேல் என்பானா? பட்டையா? நாமமா என்பதில் விட்டுக் கொடுப்பீர்களா? சைவர்கள் வைணவ, சமண மதங்களை அழித்த கதை தெரியுமா? அவ்வாறு வைணவ சைவர்களை தாழ்ந்தவராக நோக்கும் நிலை உங்களுக்குத் தெரியுமா?
இராமாயணம், மகாபாரதம் என்பன விஷ்ணு புகழ் பாட எழுதப்பட்டவை. இவற்றில் கதாநாயகன் விஷ்ணுவின் அவதாரங்களேயன்றி, சிவன் அல்ல. மேலும், தமிழர்களின் ஆதி வழிபாடு நாட்டார் தெய்வங்கள் எனப்பட்ட சிறு தெய்வங்களாகும். பின்னாளில் சைவம், இந்து என தமிழர் உள்வாங்கப்பட்டனர்.
உலகில் கிறிஸ்தவனோ, முஸ்லிமோ தாக்கப்பட்டால், அவர்கள் குரல் கொடுக்க பின் நிற்பதில்லை. ஆனால், இலங்கையில் உள்ள தமிழ் சைவர்கள் அழிக்கப்பட்டபோது இந்து மதம் என்ற போர்வையில் இருந்த ஆளும் வைணவர்கள் வேடிக்கை பார்த்ததோடு மட்டும் நில்லாமல், தமிழ் சைவர்கள் அழிவுக்கும் காரணமான கதை தெரியுமா?
கிறிஸ்தவ, இஸ்லாமிய சமயப் பிரிவு வழிபாட்டிடங்களுக்கு மற்ற பிரிவினர் செல்வதைத் தவிர்ப்பர். ஏன் ஒரு கிறிஸ்தவன் மசூதிக்குச் செல்லலாம். அவ்வாறே, ஒரு முஸ்லிம் கிறிஸ்தவ தேவாலயத்திற்குச் செல்லலாம். இதில் தடை ஏதும் இல்லை. ஆனால், இந்து சமயத்தில் சாதி வாரியாக கோயில்கள் உள்ளன. ஒரு சாதி கோயிலுக்கு மற்ற சாதியினர் செல்லக் கூடாது. இந்து சமய மநுநீதி நூல் மனிதர்களை தொழில் முறை மூலம் சாதியாகப் பிரித்த அநீதியை நீங்கள் நீதி என்று சொல்ல முடியுமா? நீங்கள் ஒரு இந்து தலித் என்றால், பிராணமர்களின் புறக்கணிப்பை ஏற்றுக் கொள்வீர்களா?
சமயங்கள் அணைத்தும் பல நடைமுறைச் சிக்கல்களைக் கொண்டவை. இதில் சிறிது, பெரிது என வாதிடுவது முடிவிலியாகவே அமையும். தன் சமயம்தான் சரியானது என்பதும், அதனை நிறுவ பிற மதங்களை குற்றம் சாட்டுவது என்பதும் மடமை. மற்ற மதங்களை குற்றம் சொல்லும் முன், தன் மதத்தில் பிழை இல்லையா எனப் பார்க்க வேண்டும். மெய்ப்பொருள் காண்பதே அறிவு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துக்களை நாகரீகமாக, வெளி இணைப்பு இன்றி பதிவு செய்யலாம். நாகரீகமற்ற, வெளியிணைப்புள்ள கருத்துக்கள் நீக்கப்படும்.