இந்தியா டுடேவின் 2018 செப்டம்பர் 10 ஆம் தேதியிட்ட ஆங்கிலப் பதிப்பு "An Inconvenient Truth" என்ற பெயரில் ஒரு கவர் ஸ்டோரியை வெளியிட்டிருக்கிறது. அதன் சுருக்கமான தமிழாக்கம்தான் இந்தக் கட்டுரைத் தொடர்:
புனேவின் டெக்கான் கல்லூரியின் துணை வேந்தரான டாக்டர் வசந்த் சிண்டே ஒரு அகழ்வாராய்ச்சியாளர். இவரும் இவரது அணியினரும் அரியானாவின் இராகிகடி என்ற இடத்தில் அகழ்வாராய்ச்சியை 2015 இல் மேற்கொண்டனர். அந்த ஆய்வின் முடிவுகள் பெரும் தயக்கத்திற்குப் பிறகு இப்போது வெளியாகியிருக்கின்றன. இந்த முடிவை இந்துத்துவவாதிகள் எப்படி எதிர்கொள்வார்களோ என்பதுதான் தயக்கத்திற்குக் காரணம்.
இராகிகடியில் இந்த அணி அகழ்வாராய்ச்சியை மேற்கொண்டபோது, 4,500 ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடு ஒன்று கிடைத்தது. அந்த எலும்புக்கூட்டின் மண்டை ஓட்டில் உள்ள Petrous bone என்ற காதுகளைப் பாதுகாக்கும் பகுதியை பிரித்தெடுத்து, அதிலிருந்து அந்த எலும்புக்கூட்டின் மரபணு ஆராயப்பட்டது. அந்த ஆராய்ச்சியின் முடிவுகள் சில கேள்விகளுக்குப் பதில் அளித்திருக்கின்றன.
1. கே. அரப்பா நாகரீகத்தைச் சேர்ந்தவர்கள்தான் சமசுகிருத மொழியையும் வேதகால இந்து மதத்தையும் உருவாக்கினார்களா?
பதில்: இல்லை.
2. கே. அவர்களது மரபணு, ஆரியர்-திராவிடர் என்ற பிரிவில் யாரோடு பொருந்துகிறது?
பதில்: திராவிடர்கள்.
3. கே. தற்போதைய காலத்தில் இவை தென்னிந்தியர்களுடன் அதிகம் பொருந்துகின்றனவா, அல்லது வட இந்தியர்களுடனா?
பதில்: தென்னிந்தியர்கள்.
எல்லாமே மிகச் சிக்கலான கேள்விகள், பதில்கள். இந்த ஆய்வின் முடிவுகள் விரைவில் Science இதழில் பதிப்பிக்கப்படவிருக்கின்றன.
2015 இலேயே ஆய்வு முடிந்துவிட்டது என்றாலும் விவகாரம் அரசியல் ரீதியாக உணர்ச்சிகளைத் தூண்டக்கூடியது என்பதால் சிண்டே முடிவுகளைப் பதிப்பிக்கத் தயங்கினார். அரப்பா தொடர்பான எந்த ஆய்வு முடிவானாலும் தற்போதை மத்திய அரசின் இந்துத்துவக் கருத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதாவது, வேத காலமும் அப்போதைய இந்து மதமும்தான் இந்திய நாகரீகத்தின் துவக்கம் என்பதைத்தான் தற்போதைய அரசு வலியுறுத்த விரும்புகிறது.
ஆனால், அரப்பா நாகரீகம் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு இது சிக்கலானது. 1924 இல் சிந்துச் சமவெளி நாகரீகத்தின் சிதைவுகளை காலனீய அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தபோதே, அது வேத காலத்திற்கு முந்தைய நாகரீகம் என்பது தெளிவாகிவிட்டது. அந்த நாகரீகம் வடமேற்குப் பகுதியிலிருந்து வந்த ஆரியர்களால் அழிக்கப்பட்டது என்ற கருதுகோளை அவர்கள் முன்வைத்தனர். பின் வந்த ஆராய்ச்சியாளர்கள் ஆரியர்களின் ஆக்கிரமிப்பு என்ற கருத்தை ஏற்கவில்லை. ஆனால், சிந்துச் சமவெளி நாகரீகம் வேதகாலத்திற்கு முந்தையது என்ற கருத்தை ஏற்றனர்.
இந்துத்துவ தேசியவாதிகளைப் பொறுத்தவரை இந்த ஆரிய ஆக்கிரமிப்பு கருத்தாக்கம் பெரும் எரிச்சலையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. ஆனால், தென்னிந்தியர்களைப் பொறுத்தவரை சிந்துச் சமவெளி நாகரீகம் திராவிட நாகரீகம் எனக் கருதினர்.
ஆனால், உண்மையில் சிந்துச் சமவெளியில் வசித்தவர்கள் யார் என்பது மர்மமாகவே இருந்தது. இராக்கிகடியில் கிடைத்திருக்கும் 4500 ஆண்டு பழமையான இந்த எலும்புக்கூடு இதில் சில கேள்விகளுக்குப் பதிலளிக்கக்கூடும். இந்த எலும்புக்கூட்டுக்கு I4411 எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. இஇராகிகடிதான் இந்தியாவின் மிகப் பெரிய அரப்பா-சிந்துச்சமவெளி நாகரீக பகுதி. பாகிஸ்தானின் சிந்து பகுதியில் 1920 களில் அகழ்வாய்வுசெய்யப்பட்ட மொகெஞ்சோதாரோவைவிட மிகப் பெரிய ஆகழ்வாய்வுத் தளம் இது.
1960 களில் இருந்தே இங்கே ஆய்வு மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இயேசு பிறப்பதற்கு 7000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இங்கு ஒரு நகர்ப்புற நாகரீகம் இருந்திருக்கிறது என்பது பல முறை நிரூபிக்கப்பட்டுவிட்டது.
இன்றைக்கு 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தப் பகுதியில் உயர்வான ஒரு அரப்பா நாகரீகம் இருந்திருக்கிறது என்பதற்குப் போதுமான சான்றுகள் கிடைத்திருக்கின்றன. 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக மிகப் பெரிய நகரமாக இருந்து, பிறகு மர்மமான முறையில் வீழ்ந்த இந்த நகரம்தான் இந்தியாவின் முதல் நகர்ப்புற நாகரீகமாக இருக்கக்கூடும்.
இந்துத்துவவாதிகள் இந்திய வரலாற்றை மாற்றி எழுதுவதில் மிகத் தீவிரமாக இருக்கும் இந்தக் காலத்தில், அறிவியல் அதற்கு எதிர்த்திசையில் சென்றுகொண்டிருக்கிறது. அதாவது, இராகிகடி எலும்புக்கூட்டின் மரபணுவில் மரபணுக் குறியீடு R1a1 இல்லை. இந்த R1a1 குறியீடுதான் ஆரிய மரபணுக் குறியீடு என குறிக்கப்படுகிறது. இந்த மரபணுவானது 4000 ஆண்டுகளுக்கு முன்பாக கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடைப்பட்ட ஸ்டெப்பி புல் வெளி பகுதியிலிருந்து வெண்கல காலத்தில் இந்தியாவுக்கு வந்த மக்களிடம் இருக்கும் மரபணுக் குறியீடு இதுதான். இந்த மரபணுக் குறியீடு வட இந்தியர்களிடமும் வடக்கு ஐரோப்பியர்களிடமும் வலுவாகக் காணப்படுகிறது.
சிந்துச்சமவெளிப் பகுதியில் கிடைத்த ஒரே எலும்புக்கூட்டில் செய்யப்பட்ட இந்த ஆய்வில், R1a1 மரபணு குறியீடு இல்லை என்பதை வைத்து சில முடிவுகளை எட்டலாம். அதாவது சிந்துச் சமவெளி நாகரீகம் என்பது வேத கால நாகரீகத்திற்கு முந்தையது. ஆரம்பகால சமஸ்கிருதத்தைப் பேசியவர்களின் மரபணுவிலிருந்து மாறுபட்டது. இந்த ஆரம்பகால சமசுகிருதத்தைப் பேசியவர்களின் மரபணு குறியீடுகள் தற்போதைய வட இந்தியர்களிடம் பொதுவாகக் காணப்படுகின்றன.
அந்த காலகட்டத்தில், மத்திய ஆசியாவிலிருந்து பெரும் எண்ணிக்கையில் வந்தவர்கள், தெற்காசியாவின் மரபணு சித்திரத்தை மாற்றி அமைத்தார்கள் என்றாலும் பழங்கால இராகிகடியில் வசித்தவர்கள், இந்த மத்திய ஆசியாவைச் சேர்ந்தவர்களோடு எந்தத் தொடர்பும் இன்றி இருந்திருக்கக்கூடும். அதாவது சிந்துவெளி மக்களின் மூதாதையர்களுக்கும் இந்த மத்திய ஆசிய மனிதர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால், இதைப் படித்துக்கொண்டிருக்கும் உங்களது மரபணுவில் 17.5 சதவீதம் ஸ்டெப்பி புல்வெளியிலிருந்து வந்தவர்களுடையது.
நாம் பொதுவாக இஸ்லாமிய, ஐரோப்பிய நாட்டவர்கள் இங்கே வந்து ஆதிக்கம் செலுத்தினார்கள், நம் கலாச்சாரத்தை அழித்தார்கள் என்று அரசியல் முழக்கங்களை எழுப்புபவர்கள் இங்கே உண்டு. ஆனால், அவர்களது மரபணுப் பதிவுகளைவிட, ஸ்டெப்பி புல்வெளிக்காரர்களின் மரபணுப் பதிவு நம்மிடம் அதிகம் உள்ளது.
சரி, இந்த 4500 ஆண்டு பழமையான I 4411 என்பவர் யார்? "இந்த மனிதருக்கும் தென்னிந்தியாவின் பழங்குடியின மக்களுக்கும் கூடுதல் தொடர்பிருக்கிறது" என்கிறார் மரபணு ஆராய்ச்சியாளர் இராய். அதாவது, தற்போதைய நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் இருளர்களின் மரபணுவோடு இது கூடுதலாக ஒத்துப்போகிறது. இந்த மனிதர்கள் ஆரம்பகால திராவிட மொழியைப் பேசியிருக்கக்கூடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துக்களை நாகரீகமாக, வெளி இணைப்பு இன்றி பதிவு செய்யலாம். நாகரீகமற்ற, வெளியிணைப்புள்ள கருத்துக்கள் நீக்கப்படும்.