விஜயனின் வருகையும் தபாற்தலையும்

முகநூலில் கீழேயுள்ள படம் பகிரப்பட்டிருந்தது. முகநூலில் காணும் யாவும் சரியென்றோ, பிழையென்றோ முடிவு செய்யவியலாது. உண்மையும் பொய்யும் கலந்து காணப்படுகின்றன. இந்தப்படத்துடன் “இலங்கையின் ஆதிக்குடிகள் தமிழர்கள் என்பதற்கான ஆதாரம்” என்ற தொனியிலும், “இலங்கை அரசாங்கம் வெளியிட்டு, பின்னர் மீளப்பெற்றுக் கொண்ட தபாற்தலை” என்ற தொனியிலும் கருத்து வெளியிடப்பட்டது.

விஜயனின் வருகையும் தபாற்தலையும்
விஜயனின் வருகையும் தபாற்தலையும்

தபால் தலையைப் பார்த்து என்னவென்று நீங்கள் விளங்கிக் கொள்ளலாம். கடற்கலத்திலிருந்து விஜயன் தரையிறங்குவது போன்றும், இலங்கை அரசி குவேனி தரையில் உட்கார்ந்திருப்பது போன்றும் சித்தரிக்கப்பட்டுள்ளது. உண்மையில் இத்தபால் தலையை இலங்கை அரசு மீளப்பெற்றதா என்பதை அறிய முடியவில்லை. ஆயினும் இது பௌத்த காலத்தின் 2500 ஆண்டுகள் நிறைவையொட்டியும் விஜயனின் இலங்கை வருகையின் நினைவையொட்டியும் 23 மே 1956 என்று வெளியிடப்பட்டது என்பதை அறிய முடிகின்றது. பௌத்தத்தின் 2500 ஆண்டுகள் (Sambuddha Jayanthi) நிறைவையொட்டி 1956 ஆம் ஆண்டு இலங்கை அரசு வெளியிட்ட நான்கு தபால் தலைகளில் இதுவும் ஒன்று. ஏனைய முன்றில் உலகைச் சூழ்ந்த தர்மச்சக்கரம், அமைதியின் கை, விளக்குடன் தர்மச்சக்கரம் என்பன காணப்பட இது மட்டும் விஜயனின் வருகையைக் குறிப்பிட்டு அமைக்கப்பட்டுள்ளது.

இத்தபால் தலை தொடர்பில் தமிழ், சிங்கள வலைப்பூக்களின் பதிவுகள் சிலவற்றைக் காண முடிந்தது. சிங்கள வலைப்பதிவாளர் ஒருவர் “இது ஆங்கிலேயர் வெளியிட்ட தபாற்தலை. ஏனென்றால், ‘சிலோன்’ என்று எழுதப்பட்டுள்ளது. இது அவர்கள் சிங்களவர்கள் குடியேறிகள் என்ற கருத்தை திணிக்க மேற்கொண்ட முயற்சி” என குற்றம் சாட்டப்பட்டிருந்தது. உண்மையில் 1956 ஆம் ஆண்டு தபால் தலை வெளியிடப்பட்டபோது, இலங்கை சுதந்திரம் அடைந்துவிட்டது. அப்போது இலங்கையை ஆட்சி செய்தவர்கள் சிங்களவர், ஆங்கிலேயர் அல்ல. மேலும், 1972 ஆம் ஆண்டு யாப்பு நடைமுறைப்படுத்தலின் பின்பே இலங்கையின் அதிகார பூர்வப் பெயரான “சிலோன்” என்பது “சிறிலங்கா” என மாற்றப்பட்டது.

தமிழ் வலைப்பதிவாளர் ஒருவர் இது பற்றிக் குறிப்பிடுகையில், “1956 முதல் 1966 வரையான காலப்பகுதியில் இத்தீவில் இனப் போர் இருக்கவில்லை. அங்கு சமாதானம் காணப்பட்டது” எனக் குறிப்பிட்டிருந்தார். 1983 ஆம் ஆண்டுதான் இலங்கையின் முரண்பாடு போராக மாறியது. ஆயினும், அதற்கு முன் இரு இனங்களுக்குமிடையே “சமாதானம்” காணப்பட்டது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. விஜயன் எப்போது இலங்கையில் கால் பதித்தானோ அப்போது முரண்பாடும் பகையும் சண்டையும் இனங்களுக்கிடையில் ஏற்பட்டுவிட்டன. குவேனியின் ஆட்சியைப் பறித்தது, எல்லாளனுடனான போர், யாழ்ப்பாண இராட்சியம் மீதான போர் என அதிக உதாரணங்கள் உள்ளன. ஆகவே, சில அமைதியான காலங்களை பிழையாகக் கருதக்கூடாது. அவை “அமைதியான எரிமலையின் காலம்” எனக் கொள்ளலாமே தவிர, வேறல்ல. நிற்க, 1956 முதல் 1966 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற முக்கிய சம்பவங்கள் பின்வருமாறு:

  • 1956 நடைமுறைப்படுத்தப்பட்ட தனிச் சிங்களச் சட்டம் (சிங்களம் மட்டும் சட்டம்) இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த தமிழர்களில் 150 இற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
  • 1956 இல் இடம்பெற்ற கல்லோயாக் கலவரத்தில் 150 இற்கு மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டும், 100 இற்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.
  • 1957 இல் இடம்பெற்ற சிறி எழுத்துத் திணிப்பும், அதற்கு எதிரான எதிர்ப்புப் போராட்டம்
  • 1958 இல் தமிழருக்கெதிரான கலவரத்தில் 300 முதல் 1500 பேர் கொல்லப்பட்டும். 1000 இற்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.

குறிப்பிட்ட வலைப்பதிவாளருக்கு இவ்விடயங்கள் தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால், அதற்காக வரலாற்றுப் பிழைகளை பதிவு செய்யக்கூடாது. ஆனாலும், குறிப்பிட்ட பதிவில் இருந்த ஒருவிடயம் கவனிக்கத்தக்கது. அது பின்வருமாறு:

ரூபவாஹினி தொலைக்காட்சியில் இடம்பெற்ற (1983-84) நிகழ்ச்சியில் பௌத்த துறவி ஒருவர் சிங்கள கூட்டத்தைப் பார்த்து “இந்த (தமிழ்) பெண்களை தாக்குவதற்கு நீங்கள் வெட்கப்படவில்லையா? இவர்களின் கருவறையில் இருந்து நாம் பிறந்தோம் என்பதையும் அவர்களின் மார்பகங்களிலிருந்து பால் குடித்தோம் என்பதையும் நீங்கள் நினைக்கவில்லையா?" (“Aren’t you ashamed to attack these (Tamil) women? Don’t you remember we originated from their wombs and drank the milk from their breasts?”)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துக்களை நாகரீகமாக, வெளி இணைப்பு இன்றி பதிவு செய்யலாம். நாகரீகமற்ற, வெளியிணைப்புள்ள கருத்துக்கள் நீக்கப்படும்.