பௌத்த துறவிகளும் தற்கால பௌத்தமும்

இன்று முகநூல் பலருக்குப் போதை, சிலருக்குப் பொழுதுபோக்கு,  வேறுசிலருக்கு வேடிக்கை பார்க்குமிடம். அங்க உண்மையும் பொய்யும் நிறைந்துள்ளது. அங்கிருந்து நல்ல விடயங்களை மட்டும் பொறுக்கி எடுத்தால் நன்மை விளையும். அண்மையில் கீழ் உள்ள படத்தை முகநூலில் பார்க்க முடிந்தது. இந்தப்படம் பௌத்த துறவிகள் புத்தரின் சிலையின் கீழ் இருந்து துப்பாக்கிக்குத் தேவையான வெடிபொருட்களை எடுப்பதுபோல் சித்தரிக்கப்பட்டு உள்ளது. தூரத்தே அழிவைத் தெரிவிக்க அல்லது எரிக்கப்பட்டதின் அறிகுறியாக புகை தெரிகிறது. மேலும், பொதுவாக புத்தர் கண் மூடியிருப்பார். ஆனால் இச்சிலையில் உள்ள புத்தர் பீதியில் கண் பிதுங்கிக் காணப்படுகிறார். அவர் எப்படி அமைதியாகத் தியானம் செய்வது? வந்திருப்பவர்கள் கைகளில் போர் ஆயுதம் வேறு இருக்கிறது என்ற கலக்கமோ?

பௌத்த துறவிகளும் தற்கால பௌத்தமும்
பௌத்த துறவிகளும் தற்கால பௌத்தமும்
ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்குச் சமம் என்று சொல்வதுண்டு. இங்கும் அதுவே உண்மை. இந்தப்படத்தைப் பார்த்தாலே போதும், எதுவும் சொல்ல வேண்டாம் என்பது போல் உள்ளது.

புத்தர் எந்த உயிர்களுக்கும் சேதம் விளைவித்தல் கூடாது என்று போதனை செய்தவர். அந்தப் போதனையின் அடிப்படையில் உருவான மதம்தான் பௌத்தம். பௌத்த துறவிகள் வைத்துள்ள விசிறி, தாங்கள் பாதையில் எறும்பு போன்ற சிறு உயிரினங்கள் மாட்டுப்படாமல் இருக்க விசிறப் பயன்படுத்துவார்கள் என்று சொல்லப்படுவதுண்டு. எந்த மதத்திலும் இந்தளவிற்கு அகிம்மை அழுத்தமாகச் சொல்லப்பட்டிருக்காது.

ஆனால், நடைமுறையில் இலங்கை போன்ற பௌத்த நாடுகளில் வன்முறைகளுக்கு முதற் காரணம் அகிம்சையான பௌத்த சமயத்தைப் போதிக்கும் பௌத்தத் துறவிகளே! இவர்கள் அதற்குச் சொல்லும் காரணம் “பௌத்த தர்மத்தை நாட்டில் பாதுகாக்கிறோம்” என்பதாகும். “பௌத்த தர்மத்தைப் பாதுகாக்க, அதர்மம் செய்யலாமா?” என்பதற்கோ “புத்தர் எங்காவது அதர்மம் செய்தாரா அல்லது உடன்பட்டாரா?” என்பதற்கோ முறையான பதில் இல்லை. தமிழ்நாட்டின் அரசியல்வாதி ஒருவர் குறிப்பிட்ட கூற்றுத்தான் இங்கு நினைவிற்கு வருகிறது. அது என்னவென்றால், "சிங்களவர்கள் புத்தரின் பல்லைக் காத்த அளவிற்கு, அவர் சொல்லைக் காத்திருந்தால், இந்தளவிற்கு இலங்கையில் இரத்த ஆறு ஓடியிருக்காது".

குறிப்பு: இலங்கையில் கண்டி எனும் இடத்தில் உள்ள தலதா மாளிகை என்ற பௌத்த வழிபாட்டிடத்தில் புத்தரின் பல் உள்ளதாக நம்பி, அதனை அங்குள்ள சிங்கள பௌத்தர்கள் காத்து, வழிபட்டு வருகின்றனர்.

1 கருத்து:

கருத்துக்களை நாகரீகமாக, வெளி இணைப்பு இன்றி பதிவு செய்யலாம். நாகரீகமற்ற, வெளியிணைப்புள்ள கருத்துக்கள் நீக்கப்படும்.