பற்சுவைக் களஞ்சியம்

பற்சுவைக் களஞ்சியம் என்ற இத்தளமானது தமிழில் பல சுவையான தகவல்களை கொண்டுள்ளது. இதன் முதன்மையான நோக்கம் அறிவார்ந்த விடயங்களைத் தமிழில் களஞ்சியப்படுத்துவதாகும். களஞ்சியம் எனும் சொல் பொதுவாக தானியங்களைச் சேமித்து வைக்கப்படும் இடம் எனப் பொருள் கொள்ளப்படும். தற்கால வழக்கில் உணவு, பொருட்கள் போன்றவற்றை சேமிக்கப் பயன்படும் இடம் எனவும் கருதப்படுகின்றது. இக்கருத்திலேயே இத்தளத்திற்கும் பெயரிடப்பட்டுள்ளது. தமிழில் அறிவுப் பசியுள்ளவர்கள் இங்கு திருப்தியடையலாம். இது மின்னணுவியல் சார்ந்துள்ளதால், தளத்தில் e என்ற முன்னெட்டு கொடுக்கப்பட்டுள்ளது.

பற்சுவைக் களஞ்சியம்

இதன் விடயப் பரப்பிற்கு எல்லைகள் இல்லை. அறிவியல், மெய்யியல், உளவியல், சுகாதாரம், சமயம், வரலாறு என எதுவெல்லாம் அறிவுடையன கருதப்படுமே, அவையெல்லாம் இங்கு உள்ளடக்கப்படும். கட்டுரை, ஆய்வுகள், தரமான செய்தி நிகழ்வுகள், படங்கள், அனுபவங்கள் என்பன இங்கு பகிரப்படும். இதனை ஒரு அறிவுக் களஞ்சியமாகவும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் தரமற்றவை அல்லது தமிழர் அறிவுக்கு தேவைற்றது என ஆசிரியர் குழுவால் கருதப்படும் விடயங்கள் சேர்த்துக் கொள்ளப்படமாட்டாது. இத்தளம் சமய, இன, சாதி போன்ற வேறுபாடுகள் அற்றது. நடுநிலையான, தரமான தகவல்களைப் பகிர்வதே எங்கள் நோக்கம்.

இதனை ஒரு கலைக்களஞ்சியம் என்றோ விக்கிப்பீடியா என்றே கருதவியலாது. ஆனால், இதன் எழுத்து நடையும் பாணியும் கலைக்களஞ்சிய நடையோடு ஒத்த இலகு நடையில் அமைந்துள்ளது. தமிழ் இலக்கண மரபு இங்கு மீறாமல் இருக்க முழு முயற்சி செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் தற்கால தமிழ் மொழி வழக்கின் தாக்கத்தினால், தவிர்க்கவியலா இடங்களில் இலக்கண மீறல் அமையலாம். அது இலக்கண மீறலா அல்லது தற்கால மரபா என்பது நீண்ட முடிவுக்கு நாம் வரவில்லை. தற்கால வழக்கில் பற்சுவை என்பது பல் சுவை என்று பிரித்தும், பல்சுவை என்று சேர்த்தும், ஒருசில இடங்களில் பற் சுவை என்று பிரித்தும் எழுதப்படுவதைக் காணலாம். மேலும், பற்சுவை என்பது பல்லின் சுவையெனக் கருதப்படாதது, பல சுவைகள் எனப் பொருள் கொள்ளப்படத்தக்கது கவனிக்கப்படத்தக்கது. வடமொழி (கிரந்தம்) எழுத்துக்கள், பதங்கள் என்பன பாரியளவு இலக்கண மீறலைக் கொண்டிருப்பதால் அவை கூடியளவு தவிர்க்கப்படும். இது பிற மொழிகளுக்கும் பொருந்தும் என்பதையும் கருத்திற் கொள்ளவும்.